சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை அரசு உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கொரோனாவிற்கு எதிராக மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியையும், சென்னையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக தலைமை கழகத்தையும் தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த வார்டுகளில் வசிக்கும் தேமுதிக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அத்தியாவசியப் பொருட்களான உணவு காய்கறி, உடை, மருந்து, முககவசம் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும்.
துப்புரவு பணியாளர்களுக்கும், தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும்.
ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, ஷெர் ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அன்றாட தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.