சென்னை:
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள், தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அவர்கள் பயணிக்க வசதியாக, ஆண்டுதோறும் தமிழக அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்குவது வழக்கம். இந்தாண்டு சென்னையிலிருந்து இன்று முதல் 13 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த 3 நாள்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்ந்து, மொத்தம் 9 ஆயிரத்து 510 பேருந்துகளும் சென்னையிலிருந்து புறப்படும்.
பிற நகரங்களிலிருந்து 5247 சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு இயக்குகிறது. சென்னையிலிருந்து கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூவிருந்தமல்லி மற்றும் கே.கே.நகர் என 5 மையங்களிலிருந்து பேருந்துகள் புறப்படும். 13 சிறப்பு கவுன்டர்களும், உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் அவசியம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி முடிந்து சென்னைக்கு திரும்ப, 15 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் மொத்தம் 16ஆயிரத்து 26 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. பேருந்துகள் இயக்கம் பற்றி விவரங்களை அறியவும், புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.