நாடு முடுவதும் நாளை கொண்டாட இருக்கும் தீபாவளிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
வளமான வாழ்வு வாழ, ஒளிமயமான எதிர்காலம் அமைந்திட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீபாவளி நல்வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்
மனித இனத்துக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகள் அகற்றப்பட்ட நாளையே தீபாவளி திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இன்றைய மத்திய அரசின் கீழும், மாநில அரசினாலும் மக்கள் படும் துயரமும், வறுமையும் அகன்று அனைத்து மக்களின் வாழ்விலும் வளமும், நலமும் பெருக நெஞ்சம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
பாமக தலைவர் ராமதாஸ்
தீபத்தின் ஒளியைப் போலவே விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வெளிச்சமும், மகிழ்ச்சியும் கிடைக்கக்கூடிய ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும்.
தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் வாசன்
நாட்டில் நிலவும் பேதங்கள், பிணக்குகள் அகன்று அனைவரையும் அரவணைக்கும் அன்பும், அணுகுமுறையும் மலர வேண்டும் தமிழகத்தில் நிலவும் நீண்ட கால பிரச்சனைகள் நீங்கி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாமக இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
தமிழ்நாடு உட்பட உலகில் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் தீபஒளி திருநாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், அத்திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணத்தையும் தழைக்கச் செய்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாக இந்தியா திகழ இதுபோன்ற திருநாள்கள் முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.
இந்தியாவில் வாழும் அனைத்து தரப்பு மக்களிடமும் நட்பு. நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; நாட்டில் அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் பெருக வேண்டும்; வறுமையும், சுரண்டலும், வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழிய வேண்டும் என்பன உள்ளிட்ட நமது இலக்குகளை வென்றெடுப்பதற்காக கடுமையாக உழைக்க இந்த நன்னாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கே .எம்.காதர் மொகிதீன்
இந்தியாவில் வாழும் அனைத்து மத, மொழி, இன, கலாசாரங்களைக் கொண்ட அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் வாழ வேண்டும். இந்த உணர்வில் நம்பிக்கையுள்ளவர்கள் தேசத்துக்கு நல்வழி காட்டவும் வேற்றுமையில் ஒற்றுமை பேணும் மக்களாக எல்லோரும் வாழவும் இறையருளை வேண்டுகிறேன்.
இந்திய தேசிய லீக் நிஜாமுதீன்
பண்பாடு, கலாசாரம் காத்திடவும், நாடு நலம்பெறவும் நாட்டு மக்கள் வளம் பெறவும் நல்லிணக்கம் பேணவும், ஏழ்மை போக்கிடவும் தீபாவளி திருநாளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.