டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக  அகவிலைப்படி 3% அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ‘ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படி முன்தேதியிட்டு 01.07.2024 முதல் 3% அதிகரிப்பு செய்யப்படுகிறது.

 அரசு ஊழியர்களுக்கான பணவீக்கத்துடன் இணைக்கப்பட்ட கொடுப்பனவை 3 சதவீதம் உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி 3% அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரூ.9,448 கோடி நிதி இதற்கு செலவாகும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.  இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் இரண்டும் 53% ஆக உயர்ந்துள்ளன.

தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால் சுமார் 1.15 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

அகவிலைப்படி அதிகரிப்பு அக்டோபரில் அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 2024 முதல் கணக்கிடப்படும். ஆகையால், ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளத்தில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை, 3 மாத டிஏ அரியர் (DA Arrears) தொகையும் சேர்த்து வழங்கப்படும்.

இதற்கு முன்னர் ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போது அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது.

ஜனவரி மற்றும் ஜூன் 2024 க்கு இடையில் வந்த AICPI-IW குறியீட்டின் எண்ணிக்கையிலிருந்து, ஜூலை 2024 முதல் பணியாளர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி வழங்கப்படும் என்பது முடிவு செய்யப்படுகிறது.

ஜனவரியில், குறியீட்டு எண் 138.9 புள்ளிகளாக இருந்தது, இதன் காரணமாக அகவிலைப்படி 50.84 சதவீதமாக அதிகரித்தது. – இதற்குப் பிறகு, பிப்ரவரியில் 139.2 புள்ளிகளாகவும், மார்ச் மாதத்தில் 138.9 புள்ளிகளாகவும், ஏப்ரலில் 139.4 புள்ளிகளாகவும், மே மாதத்தில் 139.9 புள்ளிகளாகவும் இருந்தது.  இந்த முறைப்படி, அகவிலைப்படி ஏப்ரல் மாதத்தில் 51.44 சதவீதம், 51.95 சதவீதம், 52.43 சதவீதம் மற்றும் மே மாதத்திற்குள் 52.91 சதவீதத்தை எட்டியது. ஜூன் மாதத்தில் குறியீடு 141.4 புள்ளிகளாக இருந்த நிலையில், அகவிலைப்படியின் மதிப்பெண் 53.36 சதவீதமாக அதிகரித்தது.