சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு கடை அமைத்து விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. விற்பனைக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி பண்டிகை.  பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, வண்ண வண்ண பட்டாசுகள் வெடித்து குதுகலமாக தீபாவளியை கொண்டாடி மகிழ்வர்.  பொதுவாக, இந்தியா பண்டிகைகளின் நாடு, அவ்வப்போது வரும் பல வகையான பண்டிகைகள் மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதிலும் தீபாவளி பண்டிகைக்கு தனி மவுசு உண்டு.  இந்துக்களின்  புனிதமான  தீபாவளி பண்டிகை, கார்த்திக் மாதத்தின் அமாவாசை அன்று  வருகிறது. அதாவது, இந்த பண்டிகையானது  ஒவ்வொரு ஆண்டும் தசரா அல்லது விஜயதசமியின் 20 நாட்களுக்குப் பிறகு வருகிறது. இந்த ஆண்டு (2023) தீபாவளி பண்டிகை   நாடு முழுவதும் நவம்பர் 12, 2023 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

தீபாவளியையொட்டி பட்டாசு விற்பனை கொடிகட்டி பறக்கும் என்பதால்,. மத்திய மாநில அரசுகள் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை தீவுத்திடலில் வழக்கமாக அமைக்கப்படும் பட்டாசு கடைகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  பட்டாசு கடைகள் அக்டோபர் 29ந்தேதி முதல் நவம்பவர் 12-ம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்கபடும் என அறிவிக்கபட்டுள்ளது.

சென்னை தீவுத் திடலில் 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனை நடைபெறும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் தெரிவித்துள்ளது. பட்டாசு விற்பனைக்காக தீவுத்திடலில் 55 கடைகள் அமைக்கபடஉள்ளன‘ என தெரிவித்துள்ளது.