ரியாத்

வுதி அரேபியாவில் பெண்களுக்கே தெரியாமல் அவர்கள் கணவர்கள் விவாரத்து செய்து விடுவதால் இனி அவர்களுக்கு விவாகரத்து நோட்டிஸ் மெசேஜ் மூலம் அனுப்ப வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய சவுதி பட்டத்து இளவரசர் அந்நாட்டுப் பெண்களுக்கு பல உரிமைகள் அளித்துள்ளார். பெண்கள் வாகனம் செலுத்த உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானங்களுக்கு பெண்கள் வந்து போட்டிகளைக் காண அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் இதுபோல் பெண்களுக்கு பல உரிமை அளித்துள்ள நாடுகளில் சவுதி முதல் நாடாகும்.

ஆயினும் பெண்களுக்கு தனியே வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய, மற்றும் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க, வெளிநாடுகளுக்கு கல்வி பயில செல்ல ஆகியவைகளுக்கு ஆண் கார்டியன்கள் தேவை என்னும் சட்டம் மற்றப்படாமல் உள்ளது. அது மட்டுமின்றி ஆண்களுக்கு விவாகரத்து செய்ய முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அதனால் பல நேரங்களில் பெண்களுக்கு தெரியாமலே விவாகரத்து முடிந்து விடுகிறது. இதை ஒட்டி தற்போது விவாகரத்துக்கான நோட்டிஸ்கள் பெண்களுக்கு மேசேஜ் மூலம் அனுப்பப் படவேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சவுதி நாட்டின் பெண் வழக்கறிஞர் நிஸ்ரின் காம்தி, “பல ஆண்கள் தங்கள் மனைவிக்கு தெரியாமலேயே விவாகரத்து வழக்கு பதிந்து விடுகின்றனர்.

இந்த வழக்கை குறித்து பெண்களுக்கு எந்த தகவலும் கிடைக்காததால் அவர்களால் நீதிமன்ற விசாரணைக்கு அவர்கள் வருவதில்லை. அவர்கள் விசாரணைக்கு வராததால் நீதிமன்றம் கணவர்களுக்கு ஆதரவாக விவாகரத்து வழங்கப்படுகிறது. அந்த விஷயமும் பெண்களுக்கு தெரியாமல் போய் விடுகிறது. இனி பெண்களுக்கு மேசேஜ் மூலம் விவாக்ரத்து நோட்டிஸ் அனுப்பப் பட் உள்ளதால் இந்த நிலை மாறும்” என தெரிவித்துள்ளார்.