சூரத்:
குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சியின் மத்திய பகுதியை உள்ளடக்கிய சூரத் நகரில் ‘‘பாதிக்கப்பட்ட பகுதி’’ என்ற சட்டத்தை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
மேலும், பாபோத் காவல்நிலைய எல்லையில் உள்ள வதோதராவில் பல குடியிருப்பு பகுதிகளிலும் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த பகுதிகளில் உள்ள வீடு, நிலம் உள்ளிட்ட அசையா சொத்துக்களை விற்பனை செய்ய கலெக்டரின் அனுமதி பெற வேண்டும். மத ரீதியிலான பதற்றம் நிறைந்த இந்த பகுதியில் சட்ட விரோதமான சொத்து பரிமாற்றத்தை தடுக்கும் வகையில் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதாக மாநில அரசின் அதிகாரப்பூர்வ செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லிம்பாயத் பகுதியில் உள்ள 25 குடியிருப்பு சொசைட்டி பகுதியில் இச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ சங்கீத் படீல் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார். இதன் மூலம் இந்துக்களின் குடியிருப்பு சொத்தக்களை முஸ்லிம்கள் அபகரிப்பதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எம்எல்ஏ தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையிலேயே இச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மேற்கு சூரத் தொகுதி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி கூறுகையில், ‘‘மாநில அரசு எனது கோரிக்கையை ஏற்று இச்சட்டத்தை அமல்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மக்களின் நலன் சார்ந்த சட்டமாகும்’’ என்றார்.
எம்எல்ஏ படீல் கூறுகையில், ‘‘3 நாட்களுக்கு முன்பு மாநில அரசு இச்சட்டம் அமல்படுத்துவது தொடர்பான உத்தரவு நகலை எனக்கு அனுப்பியிருந்தது. மீதமுள்ள பகுதிகளிலும் இச்சட்டத்தை அமல்படுத்த மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும்’’ என்றார்.
இச்சட்டம் அமல்படுத்தியதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.