சென்னை
இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ள தமிழக மாவட்டங்கள் விவரம் இதோ
தமிழகத்தில்ல் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து இருந்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் இருந்து வெப்பம் தணிந்து, கோடை மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் வரும் தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இன்றும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் நாளையும் (செவ்வாய்க்கிழமை), தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் நாளை மறுதினமும் என 3 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
வரும் 16 ஆம் தேதி தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும். அதாவது இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்பதால், கோடை வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்படும் என்று ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில், கடந்த 2 அல்லது 3 தினங்களாக கோடை மழை ஆங்காங்கே தலைக்காட்டிவிட்டு செல்கிறது. அதன் தொடர்ச்சியாக வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை) முதல் 18-ந் தேதி (சனிக்கிழமை) வரையிலான நாட்களுக்கு நல்ல மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.