பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களும், சபாநாயகரின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளதாக அதிருப்தி உறுப்பினர்களில் ஒருவரான விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.
இவர் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் கூறியிருப்பதாவது, “நாங்கள் சுய விருப்பத்தின் பேரிலேயே ராஜினாமா செய்தோம். கூட்டணி ஆட்சியின் மீது அதிருப்தியுடன் இருந்தோம். எங்களுடைய ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் பரிசீலிக்கவே இல்லை.
காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் மட்டுமே, அரசியல் அழுத்தங்களுக்காக தவறான முடிவெடுத்துள்ளார் சபாநாயகர்.
கடிதங்களை கட்டாயம் பரிசீலனை செய்திருக்க வேண்டும். நாங்களும் சட்டம் அறிவோம். எனவே, தண்டனைக்குள்ளான அனைவரும் நீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளோம்” என்றார். அவர்களின் முடிவிற்கு பாரதீய ஜனதாவும் பக்கபலமாக உள்ளது.