சென்னை: ஏப்ரல் 1-ந்தேதி முதல் சென்னையில் குடிநீர், கழிவுநீர் கட்டணம் செலுத்தும் அட்டைமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.
தற்போது நடைமுறையில், குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை வசூலிக்கும் முறையில் அட்டை வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுக்கு 2 முறை குடிநீர் வரியும், கழிவுநீர் கட்டணமும் செலுத்த வேண்டும். நவீன டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஏற்ப இணையதளமும் கட்டணம் செலுத்தும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மார்ச் 1ந்தேதி முதல் நுகர்வோர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை தெரிந்து கொள்ளவும் பணம் செலுத்தும் ரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் பழைய நடைமுறையான அட்டை முறை ரத்து செய்யப்படுவதாகஅறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், சென்னை குடிநீர் வாரியத்தின் நுகர்வோர்கள் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்துவதை டிஜிட்டல் கட்டண முறையில் ஊக்குவிக்கும் முறையில் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை தவிர்க்கவும் மற்றும் காகித பயன்பாட்டை குறைக்கவும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்படமாட்டாது. நுகர்வோர்களுக்கு 5 வருடங்களுக்கு ஒருமுறை நுகர்வோர் அட்டை சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கப்படுகிறது.
தற்போது 2020-ம் ஆண்டில் 2020-21 முதல் 2024-25 வரையிலான கால கட்டத்திற்கு அனைத்து நுகர்வோர்களுக்கும் நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம், குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை வசூலிக்கும் முறையினை நவீன இணைய அமைப்பிற்கேற்ப மேம்படுத்தி உள்ளது. இந்த இணைய வழியிலான கட்டண நுழை வாயிலைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம். மேலும் யு.பி.ஐ. கியூஆர் குறியீடு மற்றும் பி.ஏ.எஸ். போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணைய வசதி மூலம் நுகர்வோர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை தெரிந்து கொள்ளவும் பணம் செலுத்தும் ரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும். மேலும் வசூல் மையத்தில் பணம் செலுத்தும் போது அளிக்கப்படும் கணினி ரசீது பணம் செலுத்தியதற்கான பதிவாக கருதப்படும். எனவே நுகர்வோர்களுக்கு ஏப்ரல் 1-ந்தேதி முதல் புதியதாக நுகர்வோர் அட்டை வழங்கப்படமாட்டாது. மேலும் ஏற்கனவே உள்ள நுகர்வோர் அட்டையிலும் பணம் செலுத்தப்பட்டதற்காக எந்த பதிவும் செய்யப்படமாட்டாது.
இவ்வாறு சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.