பானஜி:

கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியதால், முதல்வர் மனோகர் பாரிக்கரை சந்தித்து பாஜக எம்எல்ஏவும், கோவா சட்டப்பேரவை துணை சபாநாயகருமான மைக்கேல் லோபோ ஆலோசனை நடத்தியுள்ளார்.


மனோகர் பாரிக்கர் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை கோவா முதல்வராக்க பாஜக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலம் குறித்து டாக்டர்கள் உறுதியாக ஏதும் சொல்லாததால், அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை முதல்வராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, முதல்வர் மனோகர் பாரிக்கரை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ சந்தித்துப் பேசினார். 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கு வேட்பாளர்கள் தேர்வு குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்பட்டது.

எனினும், முதல்வர் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பாஜகவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, கோவாவில் பாஜக அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதால்,பாரிக்கர் அரசை டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை விடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, ஆட்சி அமைக்கவும் ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளது.

தனிப் பெரும்பான்மையுடன் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியதையடுத்து, முதல்வர் மனோகர் பாரிக்கருடன் துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

மொத்தமுள்ள 37 சட்டப்பேரவை இடங்களில் தற்போது பாஜகவுக்கு 12 எம்எல்ஏக்களும் காங்கிரஸுக்கு 14 எம்எல்ஏக்களும் உள்ளனர்.