பரேலி
தேசிய ஊரடங்கால் உத்தரப் பிரதேச மாநிலத்துக்குத் திரும்பிய பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மீது ரசாயன கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
நாடெங்கும் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த 24 ஆம் தேதி முதல் 21 நாட்கள் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு மாநிலங்களில் பணி புரிந்து வந்தோர் அவரவர் சொந்த மாநிலங்களுக்குத் திரும்புகின்றனர். இவர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் நடந்தே செல்லும் அவலமும் சில இடங்களில் நேர்ந்துள்ளன.
பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்கின்றனர். அம்மாநில தலைநகர் லக்னோவில் இருந்து பரேலி நகருக்கு சிறப்புப் பேருந்துகள் மூலம் பலர் வந்துள்ளனர். அப்படி வந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரையும் சாலையில் அமர வைத்து ரசாயன கிருமி நாசினியை அவர்கள் மீது அதிகாரிகள் தெளித்துள்ளனர்.
இதனால் பல பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சை ஆனது. உ பி முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய குழந்தைகள் உரிமைகள் காப்பு ஆணையம் இந்த நிகழ்வு குறித்து பரேலி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு இட்டுள்ளது. மேலும் இவ்வாறு குழந்தைகள் மீது ரசாயன கிருமி நாசினி தெளிக்கச் சொன்ன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் தனது டிவிட்டரில், “தொழிலாளர்கள் வந்த பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்குமாறு பரேலி மாநகராட்சி ஊழியர்களுக்கும் தீயணைப்பு படையினருக்கும் உத்தரவு இடப்பட்டது. அவர்கள் அதை மீறி மக்கள் மீது கிருமி நாசினி தெளித்துள்ளனர். அந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நான் உத்தரவு இட்டுள்ளேன்” எனப் பதிந்துள்ளார்.