டெல்லி: சீன நிறுவனம் முதலீடு செய்துள்ள பேடிஎம்’ நிறுவனத்தின் கேம்ஸ் அம்பாசடராக சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டிருப்பது, இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்து வரும் மத்தியஅரசு, பேடிஎம் போன்ற தனியார் நிதி நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கி வருகிறது. இதன் காரணமாக, மத்தியஅரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் இந்தியாவில் பேடிஎம் அனைத்து வகையான கட்டணங்களையும் செலுத்தும் வசதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பேடிஎம் நிறுவனத்துக்கு பேமென்ட் வங்கி தொடங்குவதற்கும் கடந்த ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது
பேடிஎம் இந்திய நிறுவனம் என்றாலும்கூட, சீனாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் துணை நிறுவனமான ஆண்ட் ஃபினான்ஷியல் என்ற நிறுவனம் பேடிஎம் நிறுவனத்தின் முதலீட்டாளர்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
இதனால் பேடிஎம் நிறுவனத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர், பேடிஎம் நிறுவனத்தில் பெருமளவு சீன முதலீடுகள் இருப்பதாக புகார் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பேடிஎம்-ன் துணை நிறுவனமான பிஎஃப் ஜி (Paytm First Games -PFG), நிறுவனம், இந்தியாவின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை அதன் பிராண்ட் தூதராக நியமித்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கற்பனையான ஆன்லைன் விளையாட்டை, இந்தியர்களிடையே ஊக்குவிக்கும் விதமாக அவர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. மேலும், அற்புதமான கற்பனை விளையாட்டுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகிக்க முடியும். மேலும், கபாடி, கால்பந்து மற்றும் கூடைப்பந்து போன்ற பிற விளை யாட்டுகளையும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த பி.எஃப்.ஜிக்கு அவர் உதவ முடியும் என்றும் தெரிவித்து உள்ளது.
ஆனால், இதற்கு இந்தியாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நாட்டின் சிறுவணிகர்கள், சச்சின் தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். நாட்டின் சிறு வணிகர்களின் கூட்டமைப்பான அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஐஐடி) இதற்கு சச்சினுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளது.
அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், இதுதொடர்பாக சச்சினுக்கு எழுதிய கடிதத்தில், கேடிஎம்-ன் பிஎஃப் ஜி நிறுவனம், சீனா நிறுவனமான அலிபாபாவில் முதலீடு செய்கிறது.
“Paytm முதல் விளையாட்டு என்பது அலிபாபாவின் Paytm மற்றும் AG Tech இன் கூட்டு முயற்சி யாகும்” என்று அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் பிரான்ட் அம்பாசிடராக தங்களை நியமித்துள்ளதும், தாங்கள் அதை ஏற்றுக் கொண்டிருப்பதும், மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. நீங்கள் உங்களது முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.
லடாக் எல்லைப்பகுதியில் 20 இந்திய வீரர்கள் சீன விரர்களால் கொல்லப்பட்டதும், சீனா பலமுறை எல்லையில் ஆக்கிரமிப்பு செய்து வருவதும் அனைவரும் அறிந்ததே. இந்த சூழ்நிலையில், நீங்கள் சீன முதலீடு செய்த நிறுவனத்தின் பிராண்ட் தூதராக இருப்பதை எவ்வாறு ஏற்றுக்கொண்டீர்கள்.
இது நாட்டின் மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. உங்களைப் போன்ற பிரபலமான வீரர்கள் நாட்டின் துடிப்பை எவ்வாறு புரிந்து கொள்ளத் தவறிவிட்டார்கள் என்பது புரிந்துகொள்ள முடியாதது. தயவுசெய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து இந்த சலுகையை நிராகரிக்கு மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இந்த கடினமான நேரத்தில் நீங்கள் நாட்டோடு நிற்கிறீர்கள் என்று இது சீனாவுக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.