டில்லி
உணவு மாசால் நோய்கள் அதிகரிப்பதால் கவலை அடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலை ஆணையம் சர்வதேச உணவு பாதுகாப்பு தின நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தது. இதில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் காணொலி மூலம் உரையாற்றி உள்ளார்.
ஹர்ஷ் வர்தன் தனது உரையில், “உணவு பாதுகாப்பானது விளை நிலங்கள் முதல் உணவு மேசை வரையிலான ஒட்டுமொத்த உணவு சங்கிலியோடு இணைக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைக்குச் சமமான பொறுப்பை அரசு தொழில்துறை மற்றும் நுகர்வோர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
உணவுப் பாதுகாப்பின் முக்கிய அம்சமாக ஊட்டச்சத்து கொள்கைகள் மற்றும் கல்வி இருக்க வேண்டும். தற்போது உணவு சங்கிலிகள் நீளமாக, சிக்கலாக மற்றும் சர்வதேசத்தன்மை வாய்ந்தவையாக உருவாகி வருகிறது. அதே வேளையில் உணவு மாசுபாடு மூலம் நோய்கள் உருவாவது கவலை அளிக்கிறது.
இந்த நோய்கள் காரணமாக வருடத்திற்கு 15 பில்லியன் டாலர்கள் செலவாகின்றன. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் வருடத்திற்கு 150-ல் இருந்து 177 மில்லியனாக உயரும். மேலும் உணவு மூலம் ஏற்படும் நோய்களின் பாதிப்புகள் அதிகரிக்கும். எனவே அனைவரும் உணவு பாதுகாப்பை உறுதி செய்து அதனோடு சார்ந்த சிக்கல்களைக் களைய உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.