டோக்கியோ: கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, வாரத்திற்கு 5 நாட்களுக்குப் பதிலாக, மொத்தம் 4 நாட்கள் மட்டுமே பணிசெய்வது தொடர்பான விவாதங்கள் வேகமடைந்துள்ளன.

அந்நாட்டு நாடாளுமன்றத்தில், இதுதொடர்பான விவாதத்தை துவக்கியுள்ளனர் நாடாளுமன்ற உறுப்பினர்கள். வழக்கமாக, வாரம் 5 நாட்கள் பணியாற்றும் நடைமுறையே ஜப்பானில் இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால், அதை வாரத்தில் 4 நாட்களாக குறைக்கும் திட்டம் குறித்த கலந்துரையாடல் வேகம் பெற்றுள்ளது. ஜப்பானைப் பொறுத்தவரை, தங்களுக்கான விடுமுறை நாட்களை முழுமையாக பயன்படுத்த மனமில்லாதவர்கள்தான் ஜப்பான் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், அதனால் சகப் பணியாளர்களுக்கு அசெளகரியம் ஏற்படும் என்பது அவர்களின் எண்ணம்.

இந்தப் புதிய நடைமுறை, பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து வரவேற்பைப் பெறும் என்று ஆரம்பகட்ட குறியீடுகள் தென்படுகின்றன. “இது நிறுவனங்களுக்கு ஏற்புடையதா? என்பதைவிட, இப்போதைய சூழலின் தேவை” என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், ஜப்பானின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.