இந்திய உயர்கல்வி அமைப்பில் பாகுபாடு (discrimination) குறித்து நேரடியாக பேசும் முதல் தேசிய விதிமுறையை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ளது.
“உயர்கல்வியில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் விதிமுறைகள் – 2026” என்ற பெயரில் வந்துள்ள இந்தச் சட்டம், இந்திய கல்வி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.
இதற்கு எதிராக சில இடங்களில் போராட்டங்கள் நடந்தாலும், கல்வி வட்டாரங்கள் இதை வரவேற்க வேண்டிய மாற்றம் என்று கூறுகின்றன. குறிப்பாக, முந்தைய அரசின் கொள்கைகளை நீக்குவதையே பெருமையாகக் கூறும் தற்போதைய ஆட்சி, 2012-ல் இருந்த அதே விதிமுறைகளை மீண்டும் வலுப்படுத்தி 2026-ல் கொண்டு வந்திருப்பது, இந்த மாற்றத்தின் முக்கியத்துவத்தை காட்டுகிறது.

“அறையில் இருக்கும் யானை” (Elephant in the room) என்ற சொல், எல்லாருக்கும் தெரிந்த பிரச்சினை இருந்தும், யாரும் பேசத் தயங்கும் நிலையை குறிக்கும்.
இந்த புதிய UGC விதிமுறை, உயர்கல்வியில் நீண்ட காலமாக மறைக்கப்பட்ட சமூக பாகுபாடு என்ற அந்த “யானையை” வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
1950-ல் அரசியலமைப்பு சம உரிமை கொடுத்தபோதும்,
- 1948–49 ராதாகிருஷ்ணன் கமிஷன்
- 1964–66 கோத்தாரி கமிஷன்
- 1986 தேசிய கல்விக் கொள்கை
- 2009 யஷ்பால் குழு
எதுவுமே சாதி, பாலினம், சமூக அடிப்படையிலான பாகுபாடு பற்றி நேரடியாக பேசவில்லை.
முதன்முறையாக 2012-ல் UGC விதிமுறைகளில் தான் சமூக பாகுபாடு அதிகாரபூர்வமாக குறிப்பிடப்பட்டது. இப்போது அதையே 2026 விதிமுறை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
ஏன் இவ்வளவு காலம் பேசப்படவில்லை? என்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்ததாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்:
சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில், உயர்கல்வி மிகக் குறைந்த, வசதியான சமூகத்தினருக்கே கிடைத்தது.
பெண்கள், தாழ்த்தப்பட்ட சாதிகள், பழங்குடியினர், ஏழைகள் ஆகியோருக்கு கல்வி எட்டாததால், அங்கே பாகுபாடு பேசப்படவே இல்லை.
தேசிய ஒற்றுமை என்ற பெயரில், சமூக வேறுபாடுகள் “பல்வேறு தன்மை” (diversity), “பின்னடைவு” (backwardness) என்று பெயர் மாற்றம் செய்து, உண்மையான பாகுபாடு மறைக்கப்பட்டது.
1990களுக்குப் பிறகு, OBC இடஒதுக்கீடு, உயர்கல்வி நிறுவனங்கள் அதிகரிப்பு, ஆகிய காரணங்களால், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை வெகுவாக உயர்ந்தது.
இன்று, 80% மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இதனால் சமூக மோதல்கள் வெளிப்படத் தொடங்கின.
இந்நிலையில் UGC புதிய விதிமுறை பாகுபாட்டை மறைக்காமல் பெயரிட்டு பேசுகிறது
“பின்னடைவு”, “பல்வேறு தன்மை” போன்ற மெல்லிய சொற்களுக்குப் பின்னால் இருந்த உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது
பாகுபாடு செய்வோர் யார் என்பதையும் கேள்விக்குள் கொண்டு வருகிறது, இதனால் எதிர்காலத்தில் விவாதங்களும் சர்ச்சைகளும் அதிகரிக்கலாம். ஆனால், பார்க்க முடியாத யானையை விட, பார்க்க முடியும் யானை நல்லது என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
சமூக பாகுபாடு என்ற பிரச்சினையை முதலில் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல், அதற்கு தீர்வு காண முடியாது. அந்த முதல் படியை UGC 2026 விதிமுறை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]