புதுடெல்லி :
வாட்ஸ் அப் செயலியில் பதியப்படும் தகவல்கள் தற்போது அப்படியே பதிவாகி இருக்கும், இதனை நீக்க ஒவ்வொரு தகவலாக நீக்க வேண்டி இருக்கிறது. இதனை, ஒரு வாரம் கடந்த தகவல்களை தாமாக நீக்கும் (disappearing message) வகையில் புதிய அம்சத்தை (feature) இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்தவுள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.
வாட்ஸ் அப் போன்று செயல்படும் பிற தகவல் பரிமாற்ற செயலிகளான டெலிகிராம், சிக்னல், வயர் போன்ற செயலிகளில் இது போன்று தாமாக தகவல்களை நீக்கும் அம்சம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.
டெலிகிராம், சிக்னல், வயர் போன்ற செயலிகளில், பயனர்கள் 1 வினாடி முதல் 4 வாரங்கள் வரை தகவலை வைத்திருக்கவோ, நீக்கவோ கால அளவு நிர்ணயிக்கும் வகையில் அமைப்பு உள்ளது.
வாட்ஸ் அப் செயலியில் இந்த கால அளவு 7 நாட்கள் என்ற ஒரே அளவு மட்டுமே உள்ளது. தனிநபர்களுடன் செய்யும் தனித்தனி தகவல் பரிமாற்றத்தில் பயனர்கள் அந்தந்த அமைப்புகளில் (individual settings) இந்த பதிவை நீக்க கால அளவு நிர்ணயித்துக் கொள்ளலாம்.
குழு தகவல் பரிமாற்றத்தில், அந்த குழுவின் அட்மின் மட்டுமே இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும். இந்த அம்சத்தை பயன்படுத்தி தகவல் அனுப்பிய 7 நாட்கள் வரை அந்த தகவலை பார்க்காத நபருக்கு இந்த தகவல் அழிந்து போனாலும், அதன் முன்னோட்ட குறிப்பு (preview) மட்டும் அவர் பார்க்கும் வரை இருக்கும்.
அதே போல், ஒரு குறிப்பிட்ட தகவலை மேற்கோளிட்டு பதியப்படும் (quoted text) தகவலில், 7 நாட்கள் கடந்த பின்னரும் மேற்கோள் காட்டப்பட்ட தகவல் நீக்கப்படாமல் இருக்கும்.
மேலும், ஒரு தகவல் மற்றொருவருக்கு சங்கிலி தொடராக (forward message) அனுப்பும் போது, அந்த பதிவை பெறும் யாராவது ஒருவர் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தவில்லை என்றால் அவர்களுக்கு அந்த தகவல் அப்படியே பதிவாகியிருக்கும்.
இந்த தகவலை வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது, இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தும் பயனாளரின் பதிவுகளில் உள்ள படங்கள் மற்றும் வீடியோ தகவல்களும் 7 நாள் கால அளவு முடிந்ததும் தானாக நீங்கிவிடும், பயனர்கள் தங்கள் மொபைலில் தாமாக பதிவிறக்கம் (Auto-download) செய்யும் பயன்பாட்டை பயன்படுத்தியிருந்தால் மட்டுமே படங்கள் மற்றும் விடியோ பதிவு மொபைலில் இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் தாங்கள் பதிந்த பதிவை பற்றிய எந்த அச்சமுமின்றி சுதந்திரமாக தகவல்களை பரிமாற உதவுவதாக சொல்லப்பட்டாலும், ‘ஸ்கிரீன் ஷாட்’ எனும் அம்சம் உள்ளவரை பதிவுகளை கவனமாக பதிவிடுவதே நல்லது என்கிறார்கள் வல்லுநர்கள்.