கேப்டவுன்: ஐசிசி தலைவர் பதவிக்காக, கங்குலிக்கு, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவு இல்லை என்று கூறியுள்ளார் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரிய(சிஎஸ்ஏ) தலைவர் கிறிஸ் நென்ஜானி.
சமீபத்தில்தான், சிஎஸ்ஏ இயக்குநர் ஸ்மித் கங்குலிக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியிருந்தார். ஆனால், அதற்கு அந்த அமைப்பின் தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளது.
கிறிஸ் நென்ஜானி கூறியதாவது, “ஐசிசி தலைவர் பதவிக்கு யாருக்கு ஆதரவு தர வேண்டும் என்பதில் நம் நாட்டின் கிரிக்கெட் வாரிய விதிமுறைகளை மதித்து நடப்பதோடு, ஐசிசி விதிமுறைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
போட்டியில் யார் இருப்பார்கள் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. வேட்பாளர்கள் பற்றிய விபரம் தெரிந்த பின்னரே, ஆதரவு யாருக்கு என்பது முடிவு செய்யப்படும்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டிற்கு சிறந்த சேவையாற்றும் கிரீம் ஸ்மித் கருத்தின் மீது நாங்கள் பெரிய மரியாதை வைத்துள்ளோம். ஆனால், இவர்தான் ஐசிசி தலைவர் பதவிக்கான சரியான வேட்பாளர் என்று இப்போதைக்கு நாங்கள் யாரையும் எதிர்பார்க்கவில்லை” என்றுள்ளார் அவர்.