சென்னை: வாள்சண்டை போட்டியில் கலந்துகொள்ள பணமின்றி தவித்த சென்னை வீராங்கனை பவனிக்கு  6ஆண்டுகளுக்கு முன்பு, இயக்குனர் சசிகுமார் பண உதவி செய்தார். தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ள வீராங்கனை பவானி,  இயக்குநர் சசிகுமாரை தனது தாயுடன் வந்து நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

6வருடங்களுக்கு முன்னால் இத்தாலி வாள்சண்டை போட்டியில் கலந்துகொள்ள வசதியின்றி சென்னை, புதிய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, சி.ஏ.பவானி தேவி, கடுமையாக தடு மாறினார்.  இதுகுறித்து கேள்விப்பட்ட இயக்குனர் சசிகுமார், அவருக்கு 2 லட்ச ரூபாய் கொடுத்து உதவினார். இதன் காரணமாக அவர் இத்தாலி போட்டியில் இந்தியா சார்பில்,  தமிழக வீராங்கனை பவானி தேவி, தங்கப் பதக்கம்வென்று  சாதனை படைத்தார். கடந்த  2018ம் ஆண்டு,காமன்வெல்த் வாள் சண்டை போட்டியிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, , உலகின் முன்னணி வீராங்கனையும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எமிலி ராக்சுடன் மோதிய பவானிதேவி, கடுமையாக போராடி, 12 – 15 என்ற புள்ளிக் கணக்கில் வென்று, காமன்வெல்த் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

8முறை தேசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள தமிழக வீராங்கனை பவானி தேவி,  ஹங்கேரியில் நடந்த உலக கோப்பை வாள் சண்டை போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.

வாள் வீச்சு பிரிவில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ள பவானி தேவிக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் பழைய சம்பவத்தை மறக்காத பவானிதேவி,  ஒரு ஆட்டோவில் தன் தாயுடன் வந்து, தனக்கு உதவி செய்த இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமாரை சந்தித்து  நன்றி சொன்னார்.

போராடத் துணிந்தவர்களை ஏழ்மையால் தடுக்க முடியாது என்பதற்கு சென்னை வாள்சண்டை வீராங்கனை பவானியே சாட்சி.