நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை காண முடிகிறது.
கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நடிகர் ரன்பீர் கபூர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, அமீர்கான் , மனோஜ் பாஜ்பாய் , மாதவன் உள்ளிட்டோருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
”தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதும் துரதிர்ஷ்டவசமாக பப்பி லஹரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருந்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு ரசிகர்களின் வாழ்த்தும், பிரார்த்தனைகளும் தேவை. அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரும் நலத்துடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று பப்பி லஹரி சார்பாக கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாலிவுட் சினிமாவில் பாப் இசையை அறிமுகப்படுத்திய பெருமை பப்பி லஹரியைச் சேரும். தமிழிலும் ‘அபூர்வ சகோதரிகள்’, ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா’, ‘பாடும் வானம்பாடி’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏராளமான பாடல்களையும் பாடியுள்ளார்.