சென்னை: தமிழ்நாட்டில் சட்டபடிப்புகளுக்கும் நேரடித்தேர்வுதான் நடைபெறும் என டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இனிமேல் ஆன்லைன் தேர்வு கிடையாது, நேரடி எழுத்துத்தேர்வுதான் எழுத வேண்டும் என தமிழகஅரசு உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள் இனி நேரடியாக நடைபெறும் எனப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்றினால் தொடர்ச்சியாக மூன்று பருவத் தேர்வுகளையும் ஆன்லைன் மூலம் நடத்தியது. தற்போது, தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி அனைத்து பயிற்று வகுப்புகளும் நேரடியாக நடைபெற்றுவருவதனால், சட்டக் கல்வின் தரத்தைப் பேணும் வகையில் இனி பருவத் தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும்.
இத்தேர்வுகள் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கி சீர்மிகு சட்டப் பள்ளி உள்பட பல்கலைக் கழகத்தின் இணை சட்டக் கல்லூரிகளிலும் நேரடித் தேர்வுகள் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.