புதுடெல்லி: எஸ்பிஐ புதிய தலைவராக தினேஷ் குமார் காராவை, வங்கிகளின் வாரிய அமைப்பு தேர்வுசெய்துள்ளதால், எஸ்பிஐ தற்போதைய தலைவராக இருக்கும் ரஜ்னிஷ் குமாருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.
அடுத்தமாதம்(அக்டோபர்) 7ம் தேதியுடன் தற்போதைய எஸ்பிஐ தலைவரின் பதவிகாலம் முடிவடைகிறது. கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் இப்பொறுப்பை ஏற்றார் ரஜ்னிஷ் குமார்.
பிபிபி என்று சுருக்கமாக அழைக்கப்படும் வங்கிகளின் வாரிய அமைப்புதான், அரசு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான தலைவர்களைத் தேர்வு செய்கிறது. இந்த அமைப்பு, எஸ்பிஐ தலைவர் பதவிக்கு, சல்லா ஸ்ரீனிவாசலு செட்டி என்பவரை, ரிசர்வ் பட்டியல் நபராக பரிந்துரை செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது பணியிலிருக்கும் மேலாண் இயக்குநர்களிலிருந்தே, எஸ்பிஐ தலைவர் பதவியானது பொதுவாக நிரப்பப்படும். தற்போது, எஸ்பிஐ வங்கியின் மேலாண் இயக்குநர்களாக தினேஷ் குமார் காரா, அரிஜித் பாசு, சல்லா ஸ்ரீனிவாசலு செட்டி மற்றும் அஷ்வானி பாட்டியா ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.