திண்டுக்கல் மாவட்டம் , பாலசமுத்திரம், அருள்மிகு அகோபில வரதராஜ பெருமாள் ஆலயம்

திருவிழா:

திருக்கல்யாண வைபவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும்.

தல சிறப்பு:

பெருமாளின் பத்து அவதாரத் திருக்கோலங்களும் இங்கு அமைந்திருப்பது சிறப்பு.

பொது தகவல்:

இங்கு ஸ்ரீதேவி-பூதேவி சமேதராகக் காட்சி தரும் வரதராஜர் சன்னதி, கருடாழ்வார், வீர ஆஞ்சநேயருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன.

பிரார்த்தனை:

தங்களின் நட்சத்திர நாளில் இங்கு வந்து வரதருக்கு துளசி மாலை சார்த்தி வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம், பூராட நட்சத்திர நாளில், இங்கு வந்து தாயாருக்கு புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால், விரைவில் கல்யாண மாலை தோள் சேரும்.

வீர ஆஞ்சநேயருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன. இவருக்கு வெற்றிலை மாலை அல்லது வடை மாலை சார்த்தி வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும், எதிரிகள் தொல்லை ஒழியும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள இறைவனுக்கும், இறைவிக்கும் வடை மாலை சாற்றியும், புடவை சாற்றியும், சிறப்பு அபிஷேகம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

கி.பி. 1504-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கோயிலில், உற்சவர் மற்றும் மூலவர் இரண்டு பேருமே கொள்ளை அழகு. மூலவர் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராகக் காட்சி தரும் வரதராஜர் மிகுந்த வரப்பிரசாதி. தன் சன்னதிக்கு வந்து, குறைகளைச் சொல்லிப் பிரார்த்திக்க.. அவை அனைத்தையும் ஈடேற்றித் தந்துவிடுவார் என்கின்றனர் பக்தர்கள்.

இங்கு கருடாழ்வார் சன்னதிக்கு மேலே, 12 ராசிகளுக்கான கட்டங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தலத்துக்கு வந்து, ராசிக் கட்டத்துக்கு நேரே நின்று, மனதாரப் பிரார்த்தனை செய்தால், கேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும் என்பது ஐதீகம்!

பெருமாளுக்கு, புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரங்களும் நடைபெறுகின்றன. தினமும் நான்கு காலபூஜை நடைபெறும் இந்தக் கோயிலில், புரட்டாசி மாதம் வந்துவிட்டால், இன்னும் கொண்டாட்டமாகவும் குதூகலமாகவும் வழிபாடுகள் நடைபெறும். இங்கே மகாலட்சுமித் தாயாரின் சன்னதி சிறப்புடன் திகழ்கிறது.

அதாவது, பெருமாளின் பத்து அவதாரத் திருக்கோலங்களும் இங்கு அமைந்திருப்பது சிறப்பான ஒன்று எனப் போற்றுகின்றனர்.

தல வரலாறு:

ஆந்திராவின் அகோபிலம் எனும் பகுதியை ஆட்சி செய்த பால ராசா எனும் மன்னன், இங்கே தமிழகத்திலும் சில இடங்களைக் கையகப்படுத்தி ஆட்சி செய்து வந்தான்.

இப்போதைய பழநி மற்றும் உள்ள சுற்று வட்டாரப் பகுதியில் ஆட்சி செய்தவன், பிறகு ஆந்திரத்துக்கே கிளம்பிச் சென்றான்.

அதையடுத்து, மன்னனிடம் தளபதியாக இருந்த ஒபுலக்கொண்டம நாயக்கர், இந்தப் பகுதியை நிர்வகித்து வந்தார்.

திருமாலின் மீது தீவிர பக்தி கொண்டிருந்த அந்தத் தளபதி, அங்கே அவர் வசிக்கும் கிராமத்தில், பெருமாளுக்கு அழகிய கோயிலைக் கட்டி, அனுதினமும் வழிபட்டு வந்தார்.

தன் சொந்த ஊரான அகோபிலத்தை நினைவுகூரும் வகையில், அகோபில வரதராஜ பெருமாள் எனத் திருமாலுக்குத் திருநாமம் சூட்டினார் என்கிறது.

சிறப்பம்சம்:

பெருமாளின் பத்து அவதாரத் திருக்கோலங்களும் இங்கு அமைந்திருப்பது சிறப்பு.

அமைவிடம்:

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது பாலசமுத்திரம்.