அ.தி.மு.க. தினகரன் அணிக்கு – அதாங்க சசிகலா அணிக்கு – தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கு. இனிமே, “உலகிலேயே சிறந்த பொருள் தொப்பிதான். கிரேக்க மன்னன் நெப்போலியன் தொப்பி போட்டதால்தான் அரசன் ஆனான்” அப்படின்னு எல்லாம், வரலாத்து தரவுகளை கொட்டுவாரு நாஞ்சில் சம்பத்து.
“தொப்பி போடதவன் மனுசனா” ன்னு நம்மளை நாக்கைப் பிடுங்கறமாதிரி கேப்பாங்க வளர்மதி வகையறா.
இதுக்காக இவங்களை கோச்சுக்க முடியாது. தேர்தல்ல வெற்றி பெற சின்னம்தான் முக்கியம். அதுதான் நம்ம மக்கள் மனசுல பதியும். ஆளு தராதரம், கொள்கை,குந்தாணி எல்லாம் அப்புறம்தான். இதான் நம்ம ஜனநாயகம்.
அதனால தொப்பி சின்னத்தை மக்கள் மனசுல பதியவக்க தினகரன் குரூப்பு தலையால தண்ணி குடிக்கும்.
அந்த அணி பேச்சாளருங்களுக்கு உதவலாமேனு நம்ம வரலாற்று புரபசரை தேடிப்போனேன். அவரு எல்லா மேட்டரையும் கரைச்சுக் குடிச்சவரு.
அவரு சொன்ன தொப்பி வரலாறு இதுதான்:
“ஆயிரம் வருசத்துக்கு முன்னாலேயே மனுசன் தொப்பி அணிய ஆரம்பிச்சுட்டான். ஐரோப்பாவில தேப்சுக் கல்லறையில வைக்கோல் தொப்பி அணிஞ்ச மனுச உருவம் இருக்கு. இதுதான் மிக பழைய தொப்பிக்காரன் உருவம்.
பண்டைக்காலத்துல கிரேக்கத்திலும், ரோமிலும் விடுதலையான அடிமைகள் அணிவாங்க. அதாவது ஒருத்தரு அணியற தொப்பிய வச்சே அவங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாம்.
பழைய காலத்தில பெண்கள், முகத்திரை, முக்காடு மாதிரிததான் அணிஞ்சாங்க. 16 ஆம் நூற்றாண்டுலதான் பெண்களும் ஆண்களை மாதிரி தொப்பி அணியத் தொடங்கினாங்க.
ஆண்கள் அணியற வரைக்கும் தொப்பியில சில தினுசுதான் இருந்துச்சு. பெண்கள் அணிய ஆரம்பிச்சோன அப்படி இருக்க முடியுமா.. ஏகப்பட்ட புது வகைங்க வந்துச்சு.
அது மட்டுமில்ல.. துணிப்பட்டிங்க, பூக்கள், , இறகு, சல்லடைத் துணிங்க.. இதையெல்லாம் வச்சு அழகு படுத்த ஆரம்பிச்சாங்க.
1930 கள்லதான் மேற்கத்திய பெண்கள் கூந்தலைக் குட்டையாக வெட்டத் தொடங்கினாங்க அதுக்கு ஏத்தமாதிரி, தலையை முழுசா மூடற தொப்பிங்கள அணிய ஆரம்பிச்சாங்க” அப்படின்னு சொல்லி முடிச்சாரு வரலாற்று புரபசரு.
அவருக்கு ஒரு டேங்ஸ் சொல்லிட்டு, பாரீஸ் கார்னர்ல தொப்பி கடை வச்சிருக்கிற நண்பனோட கடைக்குப்போனேன்.
“தொப்பி பத்தி சொல்லுடா”ன்னேன்.
அவன், “தொப்பிக்கு நாலு பகுதிங்க உண்டு.
1. முடி, தலையின் மேற்பகுதியை மூடும் பகுதி.
2. மேல்மறைப்பு,: முன்பகுதியில் விறைப்பாக நீண்டிருக்கும் பகுதி. இது வெய்யில், மழையிலேருந்து கண்களைப் பாதுகாக்கும்.
3. விளிம்பு,: தொப்பியின் முடிப்பகுதியின் அடிப்பக்கத்தில் கிடையாகத் தொப்பியின் நாற்புறமும் சூழ வட்டமாக இருக்கும் பகுதி.
4. தொப்பிப்பட்டி,: இது விளிம்புப் பகுதிக்கு மேல், முடியின் அடிப்பகுதியைச் சுற்றியிருக்கும் பட்டி.
அப்புறம்.. முடியின் அடிப்பகுதியைச் சுற்றி உட்புறமாக தோல் அல்லது துணி மாதிரி பொருளால பட்டி பொருத்தப்பட்டிருக்கும். இது வியர்வையால தொப்பி பழுதாகாமல் இருக்கப் பயன்படுது. இதை வியர்வைப்பட்டி ன்னு சொல்லுவாங்க” அப்படின்னான் தொப்பிக்கடை நண்பன்.
அவன்கிட்ட, “தொப்பியில எத்தனை வகை இருக்கு”ன்னு கேட்டேன்.
“தொப்பியோ சைஸூ, அதைச் செய்யற பொருள், ஸ்டைல் இதைவச்சு பலவகையா பிரிக்கலாம். உதாரணமா, அசுக்கொட் தொப்பி என்ற தொப்பி, கடினமானது. இது ஆண்கள் அணியும் தொப்பி. கடினமா, வட்ட வடிவமா இருக்கும். இதே மாதிரி அக்குப்ரா, அயம், பலக்லாவா, பால்மோரல் தொப்பி, பாரெட்டீனா, அடிப்பந்துத் தொப்பி என்று பல வகை உண்டு”ன்னு சொன்னான்.
.
அவனுக்கும் ஒரு டேங்ஸ் சொல்லிட்டு கிளம்புனேன்.
தினகரன் அணிக்காரங்களே….. இன்னும் கூடுதலா தகவல் வேணும்னா கவலையே படாதீங்க… வைகோ கிட்ட கேளுங்க.. வரலாத்துல ஆரம்பிச்சு, இன்னைய லேட்டஸ் மாடல் பேபி தொப்பி வரைக்கும் தகவல் சேகரிச்சுக் கொடுப்பாரு.
ஆங்… சொல்ல மறந்து்டடேன். “மீட்டிங்ல பேசறப்போ, புரட்சிதலைவரே தொப்பிதான்யா போட்டிருந்தாரு,, மின்கம்பத்தையா அணிஞ்சாரு”னு ஒரு கேள்வி கேளுங்க.. மக்கள் மனசுல தொப்பி பதிஞ்சிரும். எதிர் குரூப்பு காலி.
இன்னொரு தகவல். போன 2016 சட்டமன்ற தேர்தல்ல ஈஸ்வரனோட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொப்பி சின்னம்தான் ஒதுக்கப்பட்டுச்சு. அதமட்டும் வெளியில சொல்லிடாதீங்க.
இன்னொரு முக்கியமான விசயம். தியாகச்சின்னம்மா சசிகலா, தொப்பி, கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு போஸ்கொடுத்த ஒரு போட்டோ ரொம்ப பேமஸ் இல்லையா.. அதமட்டும் யாரும் பார்த்திராம ஒளிச்சி வையுங்க!
அப்புறம் வாசகருங்களுக்கு ஒரு செய்தி..
இப்படி தொப்பி பத்தி மேட்டருங்களைக் கொடுத்து தினகரன் அணிக்கு சாதகம் பண்ணிட்டேனேனு நினைக்காதீங்க… ஓபிஎஸ் அணியோட ஏணிச் சின்னம் பத்தியும் அடுத்ததா தகவலுங்களை கொட்டுறேன்.