டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா விவசாயிகள் நடத்திய போராட்டத்தை போலீசார் கலைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு அண்மையில் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில், டெல்லி சலோ என்ற பெயரில் இரு மாநில விவசாயிகளும் டெல்லி நோக்கி பேரணி செல்ல முடிவு செய்தனர். விவசாயிகளின் பேரணி காரணமாக பஞ்சாப் – அரியானா எல்லையை மூடுமாறு அரியானா அரசு உத்தரவிட்டிருந்தது.
அறிவித்தப்படி இன்று காலை ஏராளமான பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி சென்றனர். அரியானா மாநில எல்லையான ஷம்பு பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து விவசாயிகளை தடுத்தனர்.
அதை மீறி முன்னேறிச் சென்ற விவசாயிகள், கருப்புக் கொடிகளுடன் முழக்கங்களை எழுப்பினர். நிலைமை எல்லை மீறியதால் போலீசார், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர்.
போராட்டம் காரணமாக அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்தது. போராட்டத்தை ஒடுக்க மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவை அரியானா மாநில போலீசார் பிறப்பித்து உள்ளனர். டெல்லியிலும் விவசாயிகளும் குவிந்ததால் மெட்ரோ ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.