அகமதாபாத்: சுழல் மற்றும் வேகப்பந்துகளை எப்படி விளையாட வேண்டுமென்று விளக்கியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்கார்.
சுழற் பந்துகளை ஆடுவதில் வல்லவர் என பெயர் பெற்றவர் இந்த வெங்சர்கார். இங்கிலாந்தை, அதன் சொந்த மண்ணிலேயே வெளுத்து வாங்கியவர். மொத்தம் 115 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ள இவர், கட்டாக் மைதானத்தில், பந்துகள் மோசமாக திரும்பிய பிட்சில், இலங்கை அணிக்கு எதிராக 166 ரன்கள் அடித்து தனது திறமையை நிரூபித்தவர்.
அகமதாபாத் பிட்ச் குறித்து தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ள சூழலில் அவர் கூறியுள்ளதாவது, “இந்தியாவுக்கான ஒரு பெரிய அனுகூலம் என்னவெனில், நாம் அடிக்கடி உள்ளூர் ஆடுகளங்களில், உலகத் தரமான சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்த்து ஆடுகிறோம். அந்த அனுபவம் நமக்குப் பெரிதும் உதவுகிறது.
ஆடுகளத்தில் பந்து ஸீம் ஆகும்போதும், திரும்பும்போதும், நீங்கள் ரன்கள் எடுக்க அதிகம் மெனக்கெட வேண்டும். பந்துகள் ஸ்பின் ஆகும்போது, ஒருவர் தனது தாக்குதலை தாமதமாக தொடங்க வேண்டும் மற்றும் பந்தில் நாம் சிக்கிக்கொள்ளாததை உறுதிசெய்ய வேண்டும். மேலும், அதுபோன்ற பந்துகள் வரும்போது, உங்களின் பேட் முதல் தடுப்பு லைனில் இருக்க வேண்டும்” என்றுள்ளார் அவர்.