டில்லி

மாற்றுத் திறனாளி மாணவி ஒருவர் சமீபத்தில் நடந்த சிபிஎஸ்ஈ பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

டில்லியை சேர்ந்த மாற்று திறனாளி மாணவி அனுஷ்கா பாண்டா. இவர் தண்டுவடத்தில் உள்ள செல்கள் பிறவியிலேயே பாதிக்கப்பட்டதால் உடல் நலம் குன்றி உள்ளார். இவரால் சக்கரநாற்காலி இன்றி எங்கும் செல்ல இயலாது.  சுமார் 14 வயதான அனுஷ்காவுக்கு பள்ளியில் அவர் அமர விசேஷ நாற்காலி அளிக்கப்பட்டுள்ளது.

உடல்நிலை குறைபாடு இருந்தாலும் படிப்பில் படுசுட்டியாக அனுஷ்கா விளங்கினார்.   தற்போது சிபிஎஸ்ஈ பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதி பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். கணிதத்தில் 99%, இந்தியில் 98%, சமூக அறிவியலில் 95% என இந்த பாடங்களில் முதல் இடம் பெற்றுள்ள அனுஷ்கா மொத்தத்தில் 97.8% மதிப்பெண் பெற்றுள்ளார்.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுத அரை மணி நேரம் கூடுதல் நேரம் அளிக்கப்படும்.   ஆனால் அனுஷ்கா அந்த கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்ளாமல் மற்ற மாணவிகளுக்கு அளிக்கப்படும் அதே நேரத்தில் தேர்வு எழுதி முடித்துள்ளார்.

அனுஷ்கா, ”நான் மாற்றுத் திறனாளி என்பதால் சிறப்பு சலுகைகள் அளிப்பதை விரும்புவதில்லை.   மற்ற மாணவிகள் போலவே என்னையும் நடத்த வேண்டும்” என கூறி உள்ளார்.    சங்கீதம் பயின்று வரும் இந்த மாணவி எதிர்காலத்தில் மென் பொருள் பொறியாளர் ஆக விருப்பம் தெரிவித்துள்ளார்.