“ஒரே மாவில் ஒரே மாஸ்டர் தயார் செய்த வெவ்வேறு வகையான உணவுகளுக்கு வேறு வேறு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருப்பதால் பில் அடிக்கும் போது கம்ப்யூட்டரே திணறுதுங்க மேடம்” ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பேச்சால் அதிர்ந்த நிர்மலா சீதாராமன்.

ஜி.எஸ்.டி., வருமான வரி, வங்கி மற்றும் காப்பீடு ஆகியவற்றில் தொழில்துறையினர் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து தொழில்துறையினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.வும் கலந்து கொண்டார்.

கோவை கொடிசியா வளாகத்தில் இன்று மாலை நடைபெற்ற இந்த கூட்டத்தில் கொடிசியா, டேக்ட், கிரில், கோபியோ, கன்ட்ரோல் பேனல், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், கொங்கு தொழில்முனைவோர், கோஸ்மா, சிட்கோ, சீமா, சைமா உள்ளிட்ட, 30 தொழில் முனைவோர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தாங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து அதிகாரிகள் முன்னிலையில் நிர்மலா சீதாராமனிடம் எடுத்துரைத்தனர்.

அப்போது பேசிய தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும், கோவை அன்னபூர்னா உணவக குழும தலைவருமான சீனிவாசன், “ஒரே மாவில் ஒரே மாஸ்டர் தயார் செய்த வெவ்வேறு வகையான உணவுகளுக்கு வேறு வேறு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருப்பதால் பில் அடிக்கும் போது கம்ப்யூட்டரே திணறுதுங்க மேடம்” என்று கூறினார்.

மேலும், ”உங்க பக்கத்துல இருக்கிற எங்கள் தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் எங்களது ரெகுலர் கஸ்டமர். அவர் வர்றப்ப எல்லாம் எங்களோட சண்டை போடுறாங்க.

ஸ்வீட்டுக்கு ஐந்து சதவிகிதம். உணவுக்கு 5%. காரத்திற்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி. பிரட் பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை.. ஆனால் உள்ள வைக்குற கீரீம்கு ஜிஎஸ்டி இருக்கு.

அவங்க வர்றாங்க.. ஜிலேபி சாப்பிடுவது, அப்புறம் காபி காரம் சாப்பிடுவது, அப்புறம் காரத்துக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி என்றால் சண்டைக்கு வருவது என்பது தினசரி நடக்கின்றது.

ஒரே பில்லில் ஒரு குடும்பத்திற்கு வெவ்வேறு மாதிரி பில் கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது.

பிரெட், பண்ணுக்கு ஜிஎஸ்டி கிடையாது அதற்குள் கிரீம் வைத்தால் அதற்கு 18% ஜிஎஸ்டி. இதை காணும் வாடிக்கையாளர்கள் ஜாமையும் கொடுத்துவிடு நானே வைத்துக் கொள்கிறேன் என்கிறார்கள், கடை நடத்த முடியவில்லை மேடம்.

எல்லாவற்றுக்கும் ஜிஎஸ்டியை ஏற்றி விட்டாலும் பரவாயில்லை ஒரே மாதிரியா பண்ணுங்க மேடம். ஒரு ஃபேமிலி வந்து உணவு சாப்பிட்டு விட்டு திரும்பினால் பில் போடுவதற்கு கம்ப்யூட்டரே திணறுதுங்க. எனவே தயவு செய்து இதனை பரிசீலனை செய்யுங்கள்” என்றார்.

தவிர, இன்புட் கிரெடிட் எடுக்கும் பொழுது அதே கிச்சன், அதே கடலை மாவு, அதே மைதா மாவு, அதே ஸ்வீட் மாஸ்டர் என இருக்கும் பொழுது அதிகாரிகளும் திணறுகிறார்கள். அவர்களுக்கும் உதவும் வகையில் ஜிஎஸ்டி குளறுபடிகளை சரிசெய்யுங்கள்” என்று கூறினார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கோவை தொழிலதிபர் தன்னை வைத்து ஜிஎஸ்டி குளறுபடிகளை விமர்சித்ததை அடுத்து மேடையில் இருந்த வானதி சீனிவாசன் செய்வதறியாது திகைக்க நிர்மலா சீதாராமனும் தனது பங்கிற்கு அசடு வழிந்தார்.