புதுடெல்லி:
டெல்லியில் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளபடியால் கடந்த 8 மாதத்தில் 4ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் 2,000 சிசிக்கும் மேலான வாகனங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. பின் மேல்முறையீடு செய்ததில், ஒரு சதவீத சுற்றுச்சூழல் வரி செலுத்த வேண்டும் என்கிற நிபந்தனையுடன் இந்த தடையை உச்ச நீதிமன்றம் விலக்கியது. இருந்தாலும் இந்த தடை காரணமாக ஆட்டோமொபைல் துறைக்கு கடந்த எட்டு மாதங்களில் ரூ.4,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் சங்கத்தலைவர் கூறினார்.
உண்மையான காற்று மாசுக்கு காரணத்தை கண்டறியாமல் ஒவ்வொருவரும் ஆட்டோமொபைல் துறையை கட்டுப்படுத்த நினைக்கிறார்கள். ஆட்டோமொபைல் துறை இந்தியாவுக்கு 3 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. உற்பத்தி ஜிடிபியில் 50 சதவீதம் ஆட்டோமொபைல் துறையின் பங்கு இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் என்றாலும், காற்று மாசுபாடு, விபத்து என எது நடந்தாலும் இந்த துறையை குற்றம் சாட்டுவது வழக்கமாகிவிட்டது.
ஒவ்வொருவரும் இந்த துறையை கட்டுப்படுத்த நினைக்கிறார்கள். டெல்லியில் குளிர்காலத்தில் பனிமூட்டம் என்பது இயல்புதான். ஆனால் ஆட்டோ மொபைல் துறையை குற்றம்சாட்ட ஊடகங்கள் வெளியிடும் செய்தியில் பல என்ஜிஓ அமைப்புகளில் செயல்பாடுகள் பின்புலமாக உள்ளன. காற்று மாசுபாட்டில் ஆட்டோமொபைல் துறையின் பங்கு 20 சதவீதத்துக்கு கீழ் இருக்கிறது.
காற்று மாசுபாட்டை குறைக்க பழைய வாகனங்கள் மீது தடைவிதிக்க வேண்டும் என ஆட்டோமொபைல் துறை சார்பாக அரசிடம் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற வாகனங்களை தடை செய்ய வேண்டும். இந்த தடையால் காற்று மாசுபாடு குறைந்துவிடுமா?
இப்போது ஒரு சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2,000 சிசிக்கும் அதிகமான கார் வாங்க நினைப்பவர்கள் அந்த எண்ணத்தை விட்டுவிடுவார்கள். இதனால் டெல்லியில் மாசு குறைந்துவிடுமா என ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர் சங்க தலைவர் தாசரி கூறினார்.