சென்னை: அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடர எந்த அனுமதியும் வழங்கவில்லை என ஆளுநா் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.. அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநா் அனுமதி அளித்ததாக முன்பு தகவல் வெளியான நிலையில், ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை பரப்பி வருகிறார். அண்ணாமலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் பேசும் போது, மீனாட்சி அம்மன் கோவிலில் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியின்போது முத்துராமலிங்க தேவர், அறிஞர் அண்ணாவை பார்த்து கடவுள் பக்தி இல்லாதவர்கள் கடவுள் பக்தி இருப்பவர்களை தவறாக பேசினால் மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டி இருக்கும் என எச்சரிக்கை செய்தார் எனவும், இதனால் பி.டி.ராஜனும் அண்ணாவும் மன்னிப்புக் கேட்டுவிட்டு ஓடினர் எனவும் கூறியிருந்தார்.
ஆனால் முத்துராமலிங்கத் தேவர் அவ்வாறு கூறவில்லை என பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. அண்ணாமலை கூறிய தகவலுக்கான எந்த ஆதாரமும் இல்லை. பாஜக தலைவர் அண்ணாமலை இவ்வாறு இட்டுக் கட்டப்பட்ட கதைகளை கூறி மக்களிடம் கலவரம், மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இருந்தார். அண்ணாமலை பேச்சு குறித்த ஆதாரங்களையும் சமர்ப்பித்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர், அண்ணாமலை மீது 2 பிரிவினருக் கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தமிநாடு அரசின் அனுமதியை பெற வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில் பியூஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அளித்த புகாரின் பேரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர முகாந்திரம் இருப்பதாக தமிழக அரசு முடிவு செய்து, வழக்கு தொடர்வதற்கான அனுமதியை அளித்து உத்தரவிட்டது. தமிழக அரசின் முக்கிய ஆணைகள் வழக்கமாக ஆளுநரின் உத்தரவுடன் எனக் குறிப்பிட்டு வெளியாவது போன்றே இந்த அனுமதி ஆணையும் வெளியிடப்பட்டது. இது சலசலப்பை ஏற்படுத்தியது. ஊடகங்களில் பேசும் பொருளாக மாறியது.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடர எந்த அனுமதியும் வழங்கவில்லை என ஆளுநா் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய ஆளுநா் ஆா். என். ரவி அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து ஆளுநா் மாளிகைக்கு பொதுமக்களிடம் இருந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கே.அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்கு குறித்து ஆளுநா் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடா்பான அனுமதி உத்தரவு எதுவும் வழங்கவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.