சென்னை:  டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை என  நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சகம்  தெரிவித்துள்ளது. இது தமிழக மக்கள் குறிப்பாக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளை ஏமாற்றியதா எடப்பாடி அரசு என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்டவேளாண் மண்டலம் என கடந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது,  டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்  தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த  2020-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்த நிலையில், ஒன்றிய அரசுக்கு அந்த முன்மொழிவு அனுப்பப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (நவம்பர் 25) தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவை ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக மக்களவையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி சுதா, டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்டவேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்டு உள்ளதாக என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ‘ அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில்,   பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவிக்க தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்தவொரு பரிந்துரையும் பெறவில்லை என பதில் அளித்துள்ளது.

மேலும், கடந்த 5 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புதிய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவில்லை என்றும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 3 திட்டங்களின் கால அளவை மட்டும் நீட்டித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும்,  கடலூர், விழுப்புரம், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 3 ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை மத்திய அரசால் அறிவிக்க முடியும். எனினும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த முன்மொழிவும் வரவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக,  கடந்த   அதிமுக ஆட்சியின்போது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார்.  2020ம் ஆண்டு  பிப்ரவரி 20ந்தேதி அன்று காவிரி டெல்டா வேளாண் மண்டல சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். இந்த மசோதாவைத் தாக்கல் செய்வது தனக்குப் பெருமையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த மசோதாவின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து வட்டாரங்களும் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் வருகின்றன. தொடர்ந்து,  காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதை அதிமுகவினர் பெருமையாக கூறி வந்தனர். ஆனால், தற்போது மத்தியஅரசு, டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்கவில்லை என்றும், அது தொடர்பாக மாநில அரசிடம் இருந்து எந்தவொரு குறிப்பும் வரவில்லை என விளக்கம் அளித்துள்ளது.