போபால்: தேர்தல் பிரச்சாரம் செய்ய விதிக்கப்பட்டிருந்த 72 மணிநேர தடையை சாத்வி பிரக்யா மீறினார் என்று வந்த புகாரையடுத்து, அவருக்கு மீண்டும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஹேமந்த் கார்கரே மரணம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு ஆகியவை தொடர்பாக சாத்வி பேசிய மோசமான கருத்துக்களுக்காக அவருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய 72 மணிநேரங்கள் தடைவிதிக்கப்பட்டது.
ஆனால், இந்த காலகட்டத்தில், மதம் சார்ந்த பாடல்களின் மூலம் மறைமுக பிரச்சாரம் செய்து, விதிமுறைகளை மீறிவிட்டார் சாத்வி என்று அவர்மீது காங்கிரஸ் சார்பாக புகாரளிக்கப்பட்டது.
ஆனால், தடை காலகட்டத்தை வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் மூலம் மட்டுமே செலவிட்டதாக, சாத்வி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சாத்வியின் மீதான தடை மே 5ம் தேதி காலையுடன் முடிவுக்கு வந்தது.
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபால் மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் மூத்த தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங்கை எதிர்த்து, பாரதீய ஜனதா சார்பில் சாத்வி நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.