சூரத்:

பிரதமர் மோடியின் கோட் சூட்டை ரூ.4.31 கோடிக்கு ஏலம் எடுத்த பிரபல சூரத் வைர வியாபாரியிடம் வைர நகையை வாங்கி ரூ.1 கோடி ஏமாற்றியுள்ளனர்.


குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் லால்ஜிபாய் படேல். கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடியின் கோட் சூட்டை ரூ.4.31 கோடிக்கு ஏலம் எடுத்ததின் மூலம் பரபரப்பாக பேசப்பட்டார்.

கடந்த ஆண்டு ஹிம்மத் மற்றும் விஜய் கோஷிய என்ற சகோதரர்கள் இவரிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள வைரங்களை கடனாக வாங்கிச் சென்றனர்.
வைரம் வாங்குவோருக்கு  பணத்தை திருப்பித் தர 120 நாட்கள் அவகாசம் அளிப்பது வியாபாரிகள் வழக்கம்.

குறிப்பிட்ட காலத்துக்கு  பின்னரும் பணம் வராததால், சகோதரர்களின் அலுவலகத்தில் பார்த்தபோது, அலுவலகம் மூடப்பட்டிருந்தது. அவர்களது போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து, லால்ஜிபாய் பட்டேல் நிறுவனம் சார்பில் சூரத் போலீஸில் புகார் தரப்பட்டது.
விசாரணையில், இரு சகோதரர்களும் இதுபோல் மேலும் பல வைர வியாபாரிகளை ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் ஏற்கெனவே இவர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.

இரு சகோதரர்களும் தற்போது தலைமறைவாக உள்ளனர்.