வாஷிங்டன்: சட்டவிரோத குடியேறிகள் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறினால், அபராதம் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளதுடன், தாமாக முன்வந்து வெளியேறும் சட்டவிரோத குடியேறிகளுக்கு 3 ஆயிரம் அமெரிக்க டாலர் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அமெரிக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு தாமாக முன்வந்து வெளியேறினால், அபராதம் ரத்து செய்யப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 31, 2025-க்குள் வெளியேறும் தகுதியுள்ள பங்கேற்பாளர்கள் அனைவருக்கும், அவர்களின் சொந்த நாடுகளுக்கு இலவச விமானப் பயணச் சீட்டு வழங்கப்படும் என்றும், அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்கான சில சிவில் அபராதங்கள் அல்லது தண்டனைகள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) தெரிவித்துள்ளது.
இதற்கு அவர்கள் புதிதாகப் பெயர் மாற்றப்பட்ட CBP Home செயலி மூலம் தாங்களாகவே முன்வந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி, சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டு கைவிலங்கிட்டு விமானம் மூலம் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதை எதிர்த்து நாட்டின் பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.
இந்த நிலையில், சட்டவிரோத குடியேறிகள் தாமாக முன்வந்து வெளியேறினால் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு செயலியான CBP-யில் பதிவு செய்து இந்தாண்டு இறுதிக்குள் தாமாக முன்வந்து வெளியேறும் சட்டவிரோத குடியேறிகளுக்கு 3 ஆயிரம் அமெரிக்க டாலர் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் அவர்களுக்கான அபராத தொகையும் தள்ளுபடி செய்யப்பட்டு, இலவச விமான டிக்கெட் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வாய்ப்பு எதிர்காலத்தில் மீண்டும் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]