மும்பை
பிரபல நடிகையும் மக்களவை உறுப்பினருமான ஹேமாமாலினியை விமர்சித்த டிவிட்டுக்கு அவர் கணவர் தர்மேந்திரா மன்னிப்பு கோரி உள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையான ஹேமாமாலினி தமிழகத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ஒரு காலத்தில் இந்திய கனவுக்கன்னி எனப் புகழப்பெற்றவர். இவருடைய பல படங்கள் வெற்றிப்படங்களாகும். அவற்றில் ஒன்றான ஷோலே திரைப்படம் உள்ளிட்ட பல படங்களில் தன்னுடன் நடித்த தர்மேந்திராவை ஹேமா திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
தற்போது இவர் மதுராவின் பாஜக மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இவருடைய கணவர் தர்மேந்திரா சமீபத்தில் ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் முதல் முதலாக ஒரு படப்பிடிப்பு தளத்தில் ஹேமாமாலினி தரையைக் கூட்டுவது போல் நடித்ததையும் தற்போது மதுரா நகரில் தெருவை சுத்தம் செய்ததையும் கிண்டல் செய்துள்ளார்.
ஹேமா தரையைக் கூட்டத் தெரியாதவர் என்பது அந்த காட்சியில் தெரிய வந்ததாக அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அந்த கால திரை ரசிகர்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆயினும் மிகச் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தர்மேந்திரா மற்றொரு டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் தர்மேந்திரா, “எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, எவ்வகை நடிப்பாக இருப்பினும் சரி, அவரை மிஞ்ச ஆள் கிடையாது. மன்னிக்கவும். மன்னிக்கவும், இனி நான் தரையைக் கூட்டுவதைப் பற்றி வாயே திறக்க மாட்டேன்” என பதிந்துள்ளார். தனது பதிவில் தான் மன்னிப்பு கோருவதைப் போல் ஒரு திரைப்பட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.