டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த பயங்கரவாதி தாக்குதலில் அந்நாட்டு ஆளுங்கட்சி தலைவரின் மகனும் ஈடுபட்டிருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
வங்க தேச தலைநகர் டாக்காவில் கடந்த 2ம் தேதி பங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய மாணவி தரிஷி உட்பட 28 பேர் பலியானார்கள்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் அந்நாட்டை ஆளும் அவாமிலீக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான இம்தியாஸ்கானின் மகனும் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. அவன் பெயர் ரோஹன்.
ரோஹன் மற்ற இளைஞர்களைப் போல உற்சாகமான, நாகரீக இளைஞனாகவே இருந்தான். பள்ளியில் இருந்தே நன்றாக படிக்கக்கூடியவன். அடிக்கடி இந்தியா வந்து பல இடங்களுக்குச் செல்வது ரோஹனின் பொழுது போக்கு. முக்கியமாக பாலிவுட் நட்சத்திரங்களுடன் போட்டோ எடுத்துக்கொள்வதில் அவனுக்கு மிகுந்த விருப்பம் உண்டு.
சமீபகமாலமாகத்தான் அவனுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அவனது தந்தையான இம்தியாஸ்கானிடம், அவர் நண்பர் ஒருவர், “உங்கள் மகனது போட்டோ, ஐ.எஸ். பயங்கரவாத இயக்க இணையதளத்தில் இருந்தது” என்று தெரிவித்திருக்கிறார்.
இம்தியாஸ்கான் மனைவிக்கு உடல் நலம் குன்றியிருந்ததால், சிகிச்சைக்காக கொல்கத்தா வந்தார்கள். அப்போது ரோஹன் இந்தியா வரவில்லை. இம்தியாஸ்கானும் அவரது மனைவியும் சிகிச்சை முடிந்து கடந்த ஜனவரியில் வங்கதேசம் திரும்பியபோது ரோஹன் வீட்டில் இல்லை.
இந்த நிலையில்தான் சமீபத்தில் டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ரோஹனும் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அந்தத் தாக்குதலின்போது பாதுகாப்பு படையினால் ரோஹன் சுடப்பட்டு பலியானான்.
இது குறித்து இம்தியாஸ்கான் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, “எனது மகனை மிக அமைதியானவனாகவும் நாகரீகமான மனிதனாகவுமே வளர்த்தேன். அவனும் அப்படித்தான் இருந்தான். ஆனால் இடையில் ஐ.எஸ். பயங்கரவாத தொடர்பு ஏற்பட்டு, இதுபோன் கொடூர செயலில் ஈடுபட்டுவிட்டான்.
அவனது செயலுக்காக நான் மிக வருத்தப்படுகிறேன். அந்த தாக்குதலில் இறந்த இந்திய மாணவியான திரிஷியின் குடும்பத்தாரிடமும், ஒட்டுமொத்த இந்தியரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
ரோஹன் போலவே அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மற்ற இளைஞர்களும் மிக அமைதியான மனிதர்களாகவே சமீபம் வரை இருந்திருக்கிறார்கள். அனைவருமே வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் திசை மாற ஆரம்ப காரணம், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் இணையதளங்கள்தான்.
அதே போல இந்தியாவில் பீஸ் டிவி (peace tv) நடத்திவரும் ஜாஹீர் நாயக்கின் தொலைக்காட்சி பேச்சுக்களை கேட்டும் பயங்கரவாதம் பக்கம் இவர்கள் திரும்பியிருக்கிறார்கள்.