பாட்னா

பீகார் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே நேற்று சென்ற சிற்றூரில் சுதந்திரம் பெற்றதில் இருந்து ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படாமல் உள்ளது.

பீகார் மாநில காவல்துறைத் தலைவர் (டிஜிபி) குப்தேஸ்வர் பாண்டே நேற்று மேற்கு சம்பரான் என்னும் மாவடடத்துக்கு  சென்றுள்ளார்.  அந்த மாவடடத்தின்  தலைநகரான பெட்டியா என்னும் ஊருக்குச் சென்ற அவர் அந்த மாவட்டத்தின் குற்றம் ஒழுங்கு விவரங்களை பார்வையிட்டார்.

அப்போது இந்த மாநிலத்தைச் சேர்ந்த காத்ரோ என்னும் ஒரு சிற்றூரின் காவல் நிலையத்தில் சுதந்திரம் பெற்றதில் இருந்து ஒரு வழக்கு கூட பதியாததைக் கண்டு வியப்படைந்தார்.  அதையொட்டி நேற்று இந்த சிற்றூருக்கு டிஜிபி ஒரு திடீர் பயணம் மேற்கொண்டு அந்த ஊரைப் பார்வையிட்டார்.

அவ்வாறு பார்வையிடும் போது நிதீஷ் என்னும் விவசாயியிடம் டிஜிபி,”எப்படி இந்த ஊரில் மட்டும் ஒரு வழக்கு கூட பதியவில்லை?   ஏதாவது ஒரு வாக்குவாதம், தகராறு, தாக்குதல் அல்லது வன்முறை ஏற்பட்டிருக்கலாமே” எனக் கேள்விகள் எழுப்பினார்.

இதற்கு நிதீஷ், “மக்களுக்குள் தகராறு ஏற்படும் போது நாங்கள் எங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்வோம்,   ஆண்கள் தொடர்பான தகராறாக இருந்தால் கிராமத்தில் உள்ள ஆண்களில் முதியவர்கள் இது குறித்துப் பேசி தீர்த்து வைப்பார்கள், பெண்கள் தொடர்பான தகராறுகளில் மூத்த பெண்கள் இது குறித்துப் பேசி முடிவு எடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த பதிலைக் கேட்டு டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.  இது போல் ஒவ்வொரு ஊரும் மாறினால் இது அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் எனக் கூறி உள்ளார். அந்த ஊரில் வசிப்போரிடம் சப்பாத்தி, வெங்காயம், உப்பு மற்றும் மிளகாய் ஆகியவற்றைப் பெற்றுச் சாப்பிட்டுள்ளார்.