சிவசேனா கட்சியின் நிறுவனர் நினைவு நாள் நிகழ்வில் கலந்துக் கொண்ட பாஜக முன்னாள் முதல்வர்

Must read

மும்பை

சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் நினைவு நாள் நிகழ்வில் பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் கலந்துக் கொண்டுள்ளார்.

சிவசேனா கட்சியும் பாஜகவும் இணைந்து மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில் களம் இறங்கின.   இரு கட்சிகளுக்கும் இணைந்து பெரும்பான்மை இடங்கள் கிடைத்தன.   இருப்பினும் முதல்வர் பதவியை இரண்டரை வருடங்களுக்குப் பங்கிட வேண்டும் என்னும் சிவசேனா கோரிக்கையை பாஜக ஒப்புக் கொள்ளவில்லை.

அதையொட்டி பாஜக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா கட்சி முயன்று வருகிறது.   இதனால் பாஜக மற்றும் சிவசேனா கட்சியினர் இடையே கடும் கோபம் நிலவி வருகிறது.

சிவசேனா கட்சி நிறுவனரும் மறைந்த மகாராஷ்டிர தலைவருமான பால் தாக்கரேவின் 7 ஆவது நினைவு தினம் இன்று மாநிலம் எங்கும் அனுசரிக்கப்படுகிறது.   இதையொட்டி மும்பை சிவாஜி பூங்காவில் அமைந்துள்ள அவர் நினைவிடத்தில் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்நாவிஸ் திடீரென தனது ஆதரவாளர்களுடன் வந்துள்ளார்.

அப்போது அங்குக் கூடியிருந்த சிவசேனா தொண்டர்கள் ஃபட்நாவிஸையும் பாஜகவையும் எதிர்த்து கோஷம் இட்டுள்ளனர்.  ஆனால் அவர்கள் அதைக் கருத்தில் கொள்ளாமல் மறைந்த தலைவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.   அப்போது சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்கள் யாரும் அங்கு இல்லை.

More articles

Latest article