பெங்களூரு: கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா 5 ஆண்டுகாலத்தை நிறைவு செய்வார் என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவ கவுடா கூறியிருக்கிறார்.

கர்நாடக அரசியலில் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தொடர்ந்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. தகுதி நீக்க எம்எல்ஏக்களின் வழக்கும் அவருக்கு சவாலான ஒன்றாக இருக்கிறது.

அண்மையில் வெளியான வீடியோ விவகாரம், அது தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் என கடும் நெருக்கடிக்கு அவரும், அக்கட்சியின் தலைமையும் ஆளாகி இருக்கிறது.

இந் நிலையில், 5 ஆண்டுகள் முதலமைச்சராக எடியூரப்பா இருப்பார் என்று மதசார்பற்ற ஜனதா தளம்  தலைவர் ஹெச்டி தேவகவுடா கூறியிருக்கிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அவர்கள் (எடியூரப்பா ஆட்சி) 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி புரியட்டும். நல்ல ஆட்சியை வழங்கினால் மக்கள் அவர்களை பாராட்டுவார்கள். அப்படி இல்லை என்றால் மக்களே அவர்களுக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுப்பார்கள் என்றார்.

சில நாட்களுக்கு முன்பு, அவரும், அவரது மகனும் முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது பேசிய அவர்கள், மாநிலத்தில் வெள்ளத்தால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மக்கள் அனைவரும் அரசின் உதவியை எதிர்நோக்கி இருக்கின்றனர். இந்த தருணத்தில் அவர்கள் மீது தேர்தல் என்பதை திணிக்கக்கூடாது. அது சரியும் கிடையாது. அதனால் தான் சொல்கிறோம் இந்த ஆட்சி நீடிக்கட்டும் என்று கூறினர்.