மதுரை: பசும்பொன் தேவர் குருபூஜையையொட்டி, அவரது சமுகத்தினர் அதிகம் பேர் வசிக்கும் மதுரை, கமுதி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 10ஆயிரம் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குருபூஜைக்கு வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழா இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள தேவர் சிலைக்கு அந்த பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர் மரியாதை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்துகின்றனர். மேலும், தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், தேவர் நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள். இதையொட்டி அந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மேலும், மதுரை, கழுதி, ராமநாதபுரம் மற்றும் பசும் பொன் பகுதிகளில், போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 300 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், பதற்றமான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் கூடுதலாக போலீசார் போடப்பட்டு, சோதனைச் சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
மாவட்டம் முழுவதும் 10,000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தென் மண்டல ஐஜி தலைமையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ள எஸ்.பி.க்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.