சிவபெருமானின் அம்சமான வீரபத்திரர்

சிவபெருமானின் அம்சமான வீரபத்திரர் பற்றிய சில விவரங்கள் :-

முற்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களிடத்தில் பெரிய அளவில் செல்வங்கள் இல்லை என்றாலும் நற்குணங்களில் அவர்கள் செல்வந்தர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்களின் இன்றைய தலைமுறை வாரிசுகளாகிய நாம் அவர்களைவிட ஓரளவு செல்வ வசதி பெற்றிருந்தாலும் குணங்களில் அவர்களை விடக் கீழான நிலையிலேயே இருக்கிறோம்.

அதிலும் இந்த பொறாமை குணம் எல்லோரிடமும் இன்றைய காலங்களில் காணப்படுகிறது. இதன் காரணமாகப் பிறரின் மீது ஏதோ ஒரு காரணத்திற்காக பொறாமை கொண்டு, அவர்களுக்கு தீய மாந்திரீக கலையின் மூலம் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்றவற்றைப் பிறருக்குச் செய்து விடுகின்றனர்.

இப்படிப்பட்ட பாதிப்பிருப்பதாக உணர்பவர்கள் ஜெபிக்க வேண்டிய ஸ்ரீ வீரபத்திரர் காயத்ரி மந்திரம் இது.

வீரபத்திரர் காயத்ரி மந்திரம் :-

ஓம் தீக்ஷ்ணதேஹாய வித்மஹே
பக்தரக்ஷகாய தீமஹி
தந்நோ வீரபத்ர: ப்ரசோதயாத்

வாரத்தின் எந்த நாட்களிலும் இம்மந்திரத்தைக் கூறி வழிபடலாம் என்றாலும், ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக வீரபத்திரர் சந்நிதி இருக்கும் கோவிலுக்குச் சென்று, பசு வெண்ணெய் சிறிது எடுத்து வீரபத்திரர் சிலையின் வாயில் தடவி, நெய் தீபம் ஏற்றி இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீளலாம். மேலும் நம்மை ஏதானும் தீய சக்திகள் பீடித்திருந்தால் அவை நீங்கும்.

தீய சக்திகளை அழிக்க, நல்லவற்றைக் காப்பாற்ற சிவ பெருமான் பல முறை பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளார். அதில் ஒன்று தான் இந்த “வீரபத்திரர்” வடிவம். புராண காலத்தில் தக்சனுடனான போரின் போது, சிவ பெருமானின் உடலில் இருந்து அவரது அம்சமாகவே தோன்றியவர் தான் வீரபத்திரர். சிவனின் மற்றொரு அம்சமான பைரவரைப் போலவே இந்த வீரபத்திரரும் ஒரு காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார்.

சிவபெருமானை வழிபடும் சைவர்களிடம் இந்த வீரபத்திரர் வழிபாடு இன்றும் பரவலாக கடைப்பிடிக்கப்படுகிறது. வீரபத்திரரை ஆலயத்தின் இறைவனாகக் கொண்ட கோவில்கள் தமிழகத்தில் ஒன்று, ஆந்திரத்தில் ஒன்று மற்றும் உத்ரகாண்டில் ஒன்று என மொத்தம் மூன்றே கோவில்கள் தான் பாரதத்தில் உள்ளன.

தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார் வீரபத்திரர். தீய சக்திகளை அழிக்கும் சக்தி படைத்த வீரபத்திரரை இம்மந்திரத்தைக் கூறி நாம் வழிபடுவதால், நம்மைப் பீடித்திருக்கும் அனைத்து தீமைகளும் நீங்கும்.