திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் வருடம் முழுவதும் பல உற்சவங்கள் நடை பெறுகின்றன. அவைகளில் முக்கியமான உற்சவம் கார்த்திகை தீபம் ஆகும். இந்த வருடம் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி அன்று கார்த்திகை தீபம் வருவதையொட்டி 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்பட உள்ளது. இந்த திருவிழா கார்த்திகை பிரம்மோத்ஸவம் என அழைக்கப்படுகிறது. வரும் 23.11.2017ஆம் தேதி தொடங்கி 2.12.2017 வரை பிரம்மோத்ஸவமும் 3.12.17 முதல் 5.12.17 வரை தெப்போத்சவமும் நடக்க உள்ளது.
முதல் நாள் 23.11.17 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூர்த்தி திருவீதி உலாவாக எடுத்துச் செல்லப்படுகிறது. உற்சவத்தின் 10ஆம் நாளான டிசம்பர் இரண்டாம் தேதி காலை நான்கு மணிக்கு பரணி தீபம் ஆலயத்தில் ஏற்றப்படுகிறது. அன்று இரவு மலையில் அண்ணாமலை தீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலையில் நிகழும் அண்ணாமலை தீபம் மிகவும் புகழ் பெற்றது. அன்று அண்ணாமலையாரே ஜோதி வடிவில் மலை உச்சியில் காட்சி தருவதாக ஐதீகம். அதையொட்டி பல லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலைக்கு வந்து குவிந்து விடுவார்கள். அந்த தீபம் ஏற்றிய பிறகு சாமி பெரிய நாயகர் தங்கத்தால் செய்த ரிஷப வாகனத்தில் ஊர்வலமாக வருவது வழக்கம்.