திருமலை வையாவூர் பிரசன்ன வேங்கடேச பெருமாள்

 

செங்கல்பட்டிலிருந்து 18 கி‌மீ.காஞ்சியிலிருந்து உத்திரமேரூர் வழி 45 கி.மீ.

500படிக்கட்டுகள்.

ராவணன் போரில் இந்திரஜித்தின் அஸ்திரத்தால் லக்ஷ்மணன் மூர்ச்சையுற்று விழ ஔஷதிகள் எடுத்து வர அனுமன் வடக்கே சென்றார்.

ஔஷதங்களின் பெயர் மறந்து விடச் சஞ்சீவி மலையையே பெயர்த்துக்கொண்டு வர தக்ஷிணகருடகிரி என்ற இத்தலத்தைத் தாண்டுகையில் மலையை வலக்கரத்திலிருந்து இடக்கரத்துக்கு மாற்றிக் கொண்டார்.மலையைக் கீழே வைக்காமல் கை மாற்றிக் கொண்டதால் திருமலை வையாவூர் எனப்பெயர் பெற்றது.

இரண்யாட்சனை சம்கரித்து பூமியை நிலை நிறுத்திய வராஹப்பெருமான் பூலோகத்தில் எழுந்தருள ஒரு மலையைத் கொண்டு வருமாறு கருடனிடம் கூறினார்.கருடாழ்வார் வைகுண்ட த்திலிருந்து ஒரு பர்வதத்தை பெயர்த்தெடுத்து வருகையில் ஒரு சிறு பாகம் பாலாற்றின் அருகில் விழுந்தது.  அந்த பகுதியே இத்தலமாகும்.கருடனின் வேண்டுகோளுக்கிணங்க பூவராஹ மூர்த்தி பூமாதேவியை ஏந்திய நிலையில் விஸ்வரூப மூர்த்தியாய் இத்தலத்தில் சேவை சாதிக்கிறார்.

 

இங்கு ஆதிசேஷன் சீனிவாசருக்குக் குடையாக விளங்குவதால் இது தக்ஷணசேஷகிரி ஆயிற்று. இங்கு எம்பெருமான் தொண்டைமானுக்கு ஒரு ரதத்தின் மேல் சேங்கோலுடன் பிரசன்னமானார். அதனால் இங்குப் பெருமாள் பிரசன்ன வேங்கடேசர் ஆனார்.பெருமாள் காட்சி தந்த தேர்ச் சக்கரமும் குதிரைக் கால் குளம்பின் அடையாளமும் ஒரு பாறை மீது காணலாம்.

ராமர் இங்கு வந்து வராஹதீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பின்னர் அயோத்தி சென்றதாகச் சொல்லப்படுகிறது.  அலர் மேல் மங்கை தாயாருக்கு தனிச் சந்நதி உண்டு.  இங்கு வியாழக்கிழமைகளில் நேத்திர தரிசனம் உண்டு. ஆதியில் வராஹப் பெருமான் இங்கே குடி கொண்டதால் அவருடைய வாசலே முதலில் திறக்கப்படுகிறது.  முதல் பூஜை நைவேத்தியமும் அவருக்கே.வராக தீர்த்தத்தில் சனி நீராடினால் பாபங்கள் தீரும். அங்கபிரக்ஷணம் செய்தால் மகப்பேறு கிடைக்கும்.