திருக்கோட்டாறு ஐராவதீஸ்வரர் சுவாமி ஆலயம்.

திருவாரூர் மாவட்டம் திருநள்ளாரிலிருந்து வடமேற்கே 5 கி.மீ தூரத்தில் உள்ள  சுமார் 1000-2000  வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த, காவிரி தென்கரைத்தலங்களில் 53வது தலமாகவும் தேவாரப்பாடல் பெற்ற  274 தலங்களில் 116வது தலமாகவும் விளங்கும்,

வெள்ளையானை தன் கோட்டினால் மேகத்தை இடித்து மழையை ஆறுபோலச் சொரிவித்து வழிபட்டதால் கோட்டாறு என இத்தலப்பெயர்.

ஐராவதம் சொர்க்கலோகத்தில் இந்திரனுக்கு வாகனமாக உள்ள யானை. வெண்மை நிறமும் நான்கு கொம்புகளும் உடையது. ஒரு முறை துர்வாச முனிவர் காசியில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு இறைவனுக்கு சாத்திய தாமரை மலர் ஒன்றை யானைமீது அமர்ந்து பவனிவரும் இந்திரன் கையில் கொடுத்தார். செல்வச் செருக்கால் இந்திரன் அம்மலரை ஒரு கையால் வாங்கி யானை மீது வைத்தான். யானை அம்மலரை தன் துதிக்கையால் கீழே தள்ளி காலால் தேய்த்தது.

துர்வாசர் இந்திரனையும் யானையையும் சபித்தார்.  அவர் சாபப்படி ஐராவதம் காட்டானையாகி நூறு ஆண்டுள் பல தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டு மதுரையில் இறைவன் அருளால் பழைய வடிவம் பெற்றது என்பது திருவிளையாடற்புராண வரலாறு. ஐராவதம் காட்டானையாய் வழிபட்ட தலங்களில் திருக்கோட்டாறும் ஒன்று.

சுபமகரிஷி என்பவர் நாள்தோறும் வந்து இப்பெருமானைத் தரிசித்து வந்தார். ஒருநாள் அவர் வருவதற்கு நேரமானதால் கோயில் கதவு சார்த்தப்பட்டது. அதைக் கண்ட “சுபர்’ தேனீ வடிவம் கொண்டு உள்ளே சென்று பெருமானை வழிபட்டார். அதுமுதல் அங்கேயே தங்கிவிட்டார்.

அக்காலந் தொடங்கி மூலவர் சன்னதியில் தேன்கூடு இருந்து வருகிறது”, தரிசிக்கச் செல்வோர் அக்கூட்டைத் தொடாது எட்டி நின்று பார்த்துவிட்டு வரவேண்டும்.

ஆண்டுக்கொரு முறை இக்கூட்டிலிருந்து தேனையடுத்து சுவாமிக்குச் சார்த்துகிறார்களாம். மீண்டும் கூடு கட்டப்படுகின்றதாம். இம் மகரிஷியின் – சுப மகரிஷியின் உருவமே வெளிச் சுற்றில் பின்புறத்தில் உள்ளது.

முன் மண்டபத்திற்கு அருகில் குமாரபுவனேசுவரர் கோவிலுள்ளது. மேற்கு நோக்கிய பெரிய சிவலிங்கம் இங்குள்ளது. இதை அகத்தியரும் சுகமகரிஷியும் சேர்ந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகத் தலவரலாறு கூறும் தலமாகத் திகழும் திருஞானசம்பந்தரால்  பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும்