சென்னை: தமிழ்நாட்டில் 16வது நிதி ஆணைய அதிகாரிகள் குழு முகாமிட்டு, தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், முன்னாள் எம்பி. சா. பீட்டர் அல்போன்ஸ், மற்றும் தணிக்கையாளர்  ஆனந்த் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை  கூட்டத்தில், தமிழ்நாடுகாங்கிரஸ் கமிட்டி சார்பில், பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனு அளிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வெளியிடட்பபட்டுள்ளது.
16வது நிதி ஆணையத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் :
1. 14வது நிதி ஆணையம் மொத்த வருவாய் தொகுப்பில் 42% மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஆனால் இறுதியில் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்கியது 40.3% மட்டுமே. அதைப்போல 15வது நிதி ஆணையம் 41% மாநிலங்களுக்கு வழங்க பரிந்துரை செய்தது. ஆனால் வழங்கிய நிதி 38.1% மட்டுமே. இதனால் மாநிலங்களுக்கு வரவேண்டிய ரூ.5.6 லட்சம் கோடி வழங்கப்படவே இல்லை. எனவே, 16 வது நிதி ஆணையம் மாநிலங்களுக்கு வழங்க பரிந்துரை செய்யும் நிதி முழுமையும் சேதமின்றி முழு நிதி தொகுப்பையும் மாநிலங்களுக்கு கிடைக்கின்ற வகையில் தகுந்த ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.
2. பொது மக்களுக்கு தேவைப்படுகின்ற அனைத்து முக்கிய சேவைகளையும் மாநில அரசுகளே செய்து வருகின்றன. ஆனால் வரி விதிக்கும் அதிகாரம் முழுமையும் ஒன்றிய அரசிடமே உள்ளது. வரி வசூலிக்கும் பல அதிகாரங்களை மாநில அரசுகள் தொடர்ந்து இழந்து வருவதால் மாநிலங்களின் அனைத்து செலவினங்களுக்கும் ஒன்றிய அரசை சார்ந்தே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதித் தொகுப்பை மொத்த தொகுப்பில் 50% ஆக கூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கேட்டுக் கொள்கிறது.
3. 11வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி தென் மாநிலங்களுக்கு மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதித் தொகுப்பில் 21.07% வழங்கப்பட்டது. ஆனால் 15வது ஆணையத்தின் பரிந்துரைகளின் படி வழங்கப்பட்ட நிதி 15.8% ஆக குறைந்து விட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 9வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் அமுலில் இருந்த போது எங்கள் மாநிலத்தின் பங்கு 7.9%ஆக இருந்தது. தற்போது 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரையில் 4.079% ஆக ஏறக்குறைய சரிபாதியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே காலக்கட்டத்தில் தேசத்தின் ஒட்டுமொத்த உற்பத்திக்கு (GDP) தென் மாநிலங்கள் 30% வழங்கியுள்ளன. இவ்வாறு தென் மாநிலங்களுக்கு பகிரப்பட்ட நிதி குறைந்ததற்கான காரணங்களை 16வது நிதி ஆணையம் ஆராய்ந்து தென் மாநிலங்களுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை களைந்து நீதி வழங்க தமிழ்நாடு காங்கிரஸ் இந்த ஆணையத்தை கேட்டுக் கொள்கிறது.
4. மாநிலங்களுக்கிடையே ஆன நிதி பங்கீட்டில் தென் மாநிலங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாக உணர்கிறோம். 15வது நிதி ஆணையம், அதுவரை பின்பற்றி வந்த 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மக்கள்தொகை அடிப்படையாக கொள்ளாமல் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்துக் கொண்டதால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றிய தமிழ்நாடு போன்ற மாநிலங்களும், அந்த திட்டங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பை தந்த மக்களும், அவர்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு சிறப்பாக திட்டங்களை நிறைவேற்றியதற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் தொகையை கையாளும் விதம் என்பதற்காக தனி மதிப்பெண்கள் வழங்கிய போதிலும் 1971 மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்பட்ட நிதி அளவால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது உண்மை.
5. அதைப்போல 11வது ஆணையத்தின் பரிந்துரையின் படி மாநிலத்தின் பரப்பளவுக்கு 7.5 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் 15 வது ஆணையம் பரப்பளவுக்கான மதிப்பெண்களை 15% ஆக இரண்டு மடங்கு உயர்த்தியதால் பூகோள ரீதியாக அதிக நிலப்பரப்பை கொண்ட மாநிலங்களுக்கு மிக அதிகமான நிதி வழங்கப்பட்டது. அதற்கு பதிலாக ‘மக்கள் வாழும் அடர்த்தி விகிதத்தின்” அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கலாமா என்பதையும் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்.
6. மேலும் குறைந்த தனிநபர் வருமானம் உள்ளோர் அதிகமாக வாழும் மாநிலங்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுவதால் தனிநபர் வருமானம் அதிகமாக உள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
7. தங்களுக்கு கிடைக்கும் வருவாயை பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘நிதி ஒழுக்கத்தின்” வழிகாட்டுதல்களை பின்பற்றி சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு 13வது நிதி ஆணையம் 17.5% மதிப்பெண்கள் வழங்கியிருந்த சூழ்நிலையில் 15வது நிதி ஆணையம் அதனை 2.5%ஆக குறைத்தது மிகவும் வருந்தத்தக்கது. அதனால் சிறப்பாக நிதி ஒழுக்கத்தை செயல்படுத்தும் மாநிலங்களுக்கு சோர்வு ஏற்படும். ஆகவே, நிதி ஒழுக்கத்துடன் சிறப்பாக செயல்படுகின்ற மாநிலங்களை ஊக்கப்படுத்துகின்ற வகையில் அந்த மதிப்பெண்களை கூடுதலாக வழங்கவேண்டும்.
8. வளர்ச்சியில் பின்தங்கி, பொருளாதார முன்னேற்றங்கள் இல்லாமல் இருக்கும் எளிய மாநிலங்களுக்கு கூடுதலாக நிதி உதவி வழங்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் முழுக்க உடன்படுகிறது. அதற்கான முன்னெடுப்புகளை ஆதரிக்கிறது. ஆனால் அதே நேரத்தில் வீணான செலவினங்களையும், திறமையற்ற நிர்வாகத்தையும்,உழைக்க விரும்பாத சோம்பேறித்தனத்தையும் நியாயப்படுத்தி ஊக்குவிக்கும் முயற்சிகளாக அந்த நிதி ஒதுக்கீடுகள் மாறிவிடக்கூடாது என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சுட்டிக்காட்ட விரும்புகிறது. இத்தகைய நிதி ஒதுக்கீடுகள் அரசியல் காரணங்களுக்காக சில மாநிலங்களுக்கு வழங்கப்படுவதால் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு தேவைப்படும் நிதி கிடைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறது.
9. ஜிஎஸ்டி அமுல்படுத்தப்பட்ட பின்னர் மாநிலங்கள் தங்களது வரி விதிக்கும் அதிகாரத்தை பெருமளவில் இழந்து விட்டன. அதே நேரத்தில் மக்களுடைய அடிப்படை தேவைகளான உணவு, சுகாதாரம், மருத்துவ வசதிகள், கல்வி, தொழில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு போன்ற அனைத்து பணிகளையும் மாநில அரசுகளே செய்வதால் மாநில அரசுகள் ஒன்றிய நிதி தொகுப்பிற்கு தரும் ஒவ்வொரு ரூபாய்க்கும் குறைந்தது ரூ.0.75 மாநிலங்களுக்கு கிடைப்பதை ஆணையம் உறுதி செய்யவேண்டும்.
10. சில மாநிலங்களுக்கு சேரவேண்டிய நிதியை அவைகளுக்கு வழங்க விரும்பாத ஒன்றிய அரசு கடந்த பத்து ஆண்டுகளாக பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை செஸ் என்கிற பெயரிலும் சர்சார்ஜ் என்ற பெயரிலும் வசூலித்து வருகிறது. வரி என்று வசூலிக்கப்படாததால் இதில் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு பங்கு தருவதில்லை. இதைப் போன்ற வசூல் கடந்த 10 ஆண்டுகளில் 153% அதிகமாகி உள்ளது என்பதையும் மாநிலங்களை புறக்கணித்துவிட்டு ஒன்றிய அரசு கடந்த 10ஆண்டுகளில் வசூலித்த தொகை ரூ.25 லட்சம் கோடி என்பதையும் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வளவு பெரிய நிதி எங்கே, யாருக்காக, எப்படி செலவழிக்கப்படுகிறது என்பது பற்றி மாநில அரசுகளிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படுவதில்லை. கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும், அரசியல் சாசன சட்டத்திற்கும் எதிரான, ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திட ஆணையத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கேட்டுக் கொள்கிறது.
இப்படி வசூல் செய்யப்படும் கட்டணங்களில் 10% நிதியை ஒன்றிய அரசு வைத்துக்கொண்டு மீதியை மொத்த வருவாய் தொகுப்பில் சேர்க்கப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.
11. ஒன்றிய அரசின் திட்டங்களை அறிவிக்கும் போது பல நிபந்தனைகளை அத்துடன் இணைப்பதை ஒன்றிய அரசு வாடிக்கையாக செய்து வருகிறது.
இதனால் மற்ற திட்டங்களுக்கான நிதிகளை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் மாநில அரசுகளுக்கு ஏற்படுகின்றன. தேசம் முழுவதும் ஒரே மாதிரியான அணுகுமுறை என்பதில் நடைமுறையில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.
மாநிலங்களுக்கு மாநிலம் சூழ்நிலைகள் மாறுவதால் அந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு திட்டங்களை செயல்படுத்த மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை ஒன்றிய அரசு கட்டுப்படுத்துவதை தவிர்த்து மாநில அரசுகள் சுதந்திரமாக செயல்படும் சூழ்நிலையினை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
12. நிதி ஒழுக்கத்தை சிறப்பாக பின்பற்றி, சிறந்த நிதி மேலாண்மையுடன் செயல்படும் மாநிலங்கள் தங்களது திட்டங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளுக்காக பல்வேறு நிறுவனங்களில் கடன் பெறுவதற்கு பல தடைகளை ஒன்றிய அரசு ஏற்படுத்துகிறது. மாநில நிதிநிலையின் அடிப்படையில் மாநில அரசுகள் எளிதாக கடன் வசதி பெறுவதை ஆணையம் உறுதி செய்யவேண்டும்.
13. பேரிடர் மேலாண்மை நிதிகள் வழங்கப்படுவதில் பல பாரபட்சங்கள் காட்டப்படுவதாக அறிகிறோம். சில மாநிலங்கள் பெருமளவில் நிதி பெறுகின்ற வேளையில் தமிழ் நாடு போன்ற சில மாநிலங்கள் இயற்கை பேரிடர்களால் பெரும் சேதங்களை சந்தித்தபோதும் போதுமான நிதியினை மாநில அரசு பலமுறை கேட்டபின்னரும் ஒன்றிய அரசு வழங்கவில்லை. இதைப் போன்ற சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு இயற்கை பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட சரியான வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசுக்கு ஆணையம் வழங்கிட வேண்டுகிறோம்.
14. சமீப காலமாக மாநிலங்களுக்கு நிதி வழங்குவதை, ஒன்றிய அரசு எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அரசு நிர்வாகத்திற்கு முட்டுக்கட்டை போடும் ‘அரசியல் ஆயுதமாக” பயன்படுத்தப்படுகிறது என்று அஞ்சுகிறோம்.
நிதிப் பங்கீடு ஆணையம் வகுத்துக் தருகின்ற வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டுமேயன்றி, ஒன்றிய அரசின் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் நடைபெற அனுமதிக்க கூடாது.
இந்த நிதி ஆண்டில் ஒன்றிய அரசு தனது திட்டங்களுக்காக மாநிலங்களுக்கு நேரடியாக வழங்கிய நிதி 4.80 லட்சம் கோடி ரூபாய். நிதி ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி வழங்கப்பட்ட நிதி ரூ.1.32 லட்சம் கோடி. ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கு வெளியே பல மடங்கு நிதிகளை ஒன்றிய அரசு தனது விருப்பப்படி ஒதுக்கீடு செய்வதை ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும்.
பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும், வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பதிலும், எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதிலும், சமூக நீதி செயல்பாடுகளிலும் தமிழகம் முன்னிலை வகிப்பதால் வட மாநிலங்களை சார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளுக்காக தமிழகம் வருகின்றனர். அப்படி வருகிறவர்களுக்கும் எல்லாவிதமான அரசின் திட்டங்களும் உதவிகளும் தரப்படுகின்றன.
இந்தியாவில் மிக அதிகமான நகர்ப்புறங்களை கொண்ட மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பெரும் சவாலாக மாறியுள்ளது.
வாழ்க்கை வசதிகள் மேம்பட்டிருப்பதால், மக்களது சராசரி ஆயுட்காலம் அதிகமாகி வருவதால் முதியோர்களின் ஜனத்தொகை கூடுகிறது. அவர்களைப் பராமரிக்கும் செலவுகள் அதிகமாகிவருகின்றன. மாநிலத்தின் சில பகுதிகள் இன்னும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளாக இருக்கின்றன. இதற்கெல்லாம் மாநில அரசுக்கு நிறைய நிதி தேவைப்படுகிறது.
எனவே, தமிழ்நாட்டிலிருந்து ஒன்றிய நிதி தொகுப்புக்கு வழங்கும் நிதிக்கு ஏற்ப நியாயமான நிதி ஒதுக்கீடு வழங்க ஆவண செய்ய வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.