அயோத்தி
உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி அயோத்தியில் அமைக்கப்பட உள்ள ராமர் கோவில் குறித்த விவரங்கள் வெளி வந்துள்ளன.
சுமார் 70 ஆண்டுகளாக இருந்து வந்த அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையை உச்சநீதிமன்ற தீர்ப்பு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இடிக்கப்பட்ட மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்த உச்சநீதிமன்றம் மசூதி அமைக்க 5 ஏக்கர் நிலம் சன்னி வக்ஃப் வாரியத்துக்கு வழங்க உத்தரவிட்டது. ராமர் கோவில் கட்டும் பணியை உடனடியாக ஆரம்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தீர்ப்பை அடுத்து கோவில் கட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோவில் கட்டும் பணி தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகளில் முடியும் என கூறப்படுகிறது. இந்தக் கோவில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு உருவாக்கி உள்ள வடிவமைப்பின் ப்டி கட்டப்பட உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே ராமர் கோவிலுக்குத் தேவையான கல் தூண்கள், உத்திரம் போன்றவற்றை வி இ ப உருவாக்கி உள்ளது. இந்தப்பணிகள் கடந்த 1990 முதலே நடைபெறுவதாகவும் தற்போது 60% பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. மேலும் இந்தக் கோவில் அமைப்பு குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கோவிலை வடிவமைத்துள்ள வி இ ப பிரமுகர் ஒருவர், “ இந்த கோவில்128 அடி உயரமும் 140 அடி அகலமும் 270 அடி நீளமும் கொண்டதாக அமைக்கப்படும் இந்த கோவிலில் 212 தூண்கள் மற்றும் 5 நுழைவாயில்கள் இருக்கும். இதில் 106 தூண்கள் தயாராக உள்ளன. கர்ப்பக் கிருகத்துக்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த கட்டமைப்பைத் தாங்க இரும்பு பயன்படுத்தப் போவதில்லை. ” எனத் தெரிவித்துள்ளார்.