அறிவோம் தாவரங்களை செண்பகமரம்.

Must read

அறிவோம் தாவரங்களை செண்பகமரம்.

செண்பகமரம். (Michelia Champaca )

இந்தோ-மலேசியா உன் தாயகம்!

அருணாச்சல பிரதேசத்தில் அதிகமாய் வளரும் நறுமண மரம் நீ!

35 மீட்டர் உயரம் வளரும் மரம் நீ!

தெற்கு ஆசியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் நிறைய வளரும் வாசமலர் மரம் நீ!

திருச்சிவபுரம், திரு நன்னிலம், திருப் பெண்ணாகடம், திருச் சேறை,   திரு நாகேஸ்வரம்,  திரு இன்னம்பர் ஆகிய கோயில்களில் தலமரம் நீ!

குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்ற செண்பகப்பூ மரம் நீ!

திருஞான சம்பந்தர் போற்றும் தெய்வமரம் நீ !

கண்நோய், தொண்டை வீக்கம், வயிறு உப்புசம், வயிற்று வலி, உடல் சூடு, சளி, பாத வெடிப்பு, செரிமானமின்மை,  சிறுநீர்ப் பிரச்சனை, ஆண்மை குறைவு ஆகியவற்றுக்கு ஏற்ற அற்புத மூலிகை நிவாரணி நீ!

இரண்டு செண்பக மரங்களை இல்லங்களில் வளர்த்தால் இனிய சொர்க்கத்தை இன்பமாய்க் காணலாம் எனப்புராணம் போற்றும் சௌபாக்ய விருட்சம் நீ!

‘களிப்புறு நறுமண மரம்’ எனச் சங்க காலப் புலவர் போற்றும் கற்பகத் தருவே!

மணவறைக் கட்டிலுக்கு மணத்தைக் கூட்டும் மணமிகு மலர் மரமே!

செயற்கைக் கூந்தலும் சிறப்பாய்த் திகழ இயற்கை நறுமணத்தை இனிதே கொடுக்கும் மகிமை மலர் மரமே!

இருக்கும் இடங்களில் இனிய நறுமணத்தை எங்கும் பரப்பும் தங்க மலர் மரமே!

பறவைகளுக்குப் பழம் தரும் பசுமை மரமே!

மலருக்காக வீடுகளில் வளர்க்கப்படும் மணமிகு மரமே!

அர்ச்சனைக்காக ஆலயங்களில் வளர்க்கப்படும் அழகு மரமே!

விதை, வேர், பட்டை என எல்லாம் பயன்படும் நல்ல மரமே!

அழியும் நிலையில் உள்ள அரிய மரமே!

அத்தர் தரும் அழகு மரமே!

நீவிர் சித்தர்கள் வாக்குகள் உள்ளவரைச் சிறப்புற்று செழிப்புற்று வாழியவே!

நன்றி : பேரா.முனைவர்.

ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி.

☎️9443405050

 

More articles

Latest article