அறிவோம் தாவரங்களை – விளா மரம்
விளா மரம் (Limonia Acidissima)
தென் கிழக்கு ஆசியா, ஜாவா மற்றும் பாரதம் உன் தாயகம்! பாகிஸ்தான், இலங்கை, தைவான் நாடுகளில் வளர்ந்திருக்கும் கனிமரம் நீ!
கடிப்பகை, பித்தம்,கபித்தம், கவித்தம்,விளவு, வெள்ளி, தந்தசடம் எனப் பல்வகைப் பெயர்களைக் கொண்ட ஒரு பொருள் குறித்த பல சொல் கிளவி நீ! சிறு விளா, பெரு விளா என இரு வகையில் விளங்கும் இனிய மரம் நீ !
30 அடிவரை உயரம் வளரும் மருந்து மரம் நீ !
”விளாவினை வவ்வால் குறுகா” என நாலடியார்(261) போற்றும் நல்ல மரம் நீ!
திருநன்றியூர், திருவக்கரை கோயில்களின் தல மரம் நீ!
ஒவ்வாமை நோய், மார்பக புற்றுநோய், வாயுத் தொல்லை, ரத்தக் கொதிப்பு, நா வறட்சி, வீக்கம், வாதம், குட்டம் ஆகிய நோய்களுக்கு ஏற்ற மூலிகை நிவாரணி நீ!
சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற சரித்திர மரமே!
சித்த மருத்துவத்தில் பயன்படும் சிறந்த மருந்து மரமே!
துவர்ப்பு, புளிப்புச் சுவை கலந்த பழ மரமே !
இலை, கொழுந்து, பூ, காய், ஓடு என எல்லாம் பயன்படும் நல்ல மரமே!
பித்தம் நீக்கும் புளிப்புப் பழ மரமே!
விநாயகர் விரும்பும் சதுர்த்தி பழ மரமே!
‘யானை உண்ட விளாங்கனி போல்’ எனவும் ‘விட்டதடி ஆசை விளாம்பழம் ஓட்டோடு’ எனவும் வழங்கும் பழமொழிகளுக்கு வித்தாய் விளங்கும் தெய்வ மரமே!அழிந்துவரும் அரிய மரமே !
நீவிர் பெருகி வளர்ந்து உயர்ந்து வாழ்க, வளர்க, உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
நெய்வேலி.