இலஞ்சிக் குமாரர் கோயில்
தமிழ் நாட்டின் தென்காசி மாவட்டத்தில் தென்காசி-செங்கோட்டை நெடுஞ்சாலையில் 5கி.மீ தொலைவிலும் குற்றாலம்-செங்கோட்டை நெடுஞ்சாலையில் 2 கி.மீ தொலைவிலும் சித்ரா நதிக்கரையில் இலஞ்சி ஊரிலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வள்ளி , தேவசேனா சமேத அருள்மிகு இலஞ்சிக்குமாரர் மற்றும் இருவாலுக ஈசர்க்கினியாள் சமேத இருவாலுக நாயகர் எழுந்தருளி அருள் பாலிக்கும் திருக்கோவில் அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில்.(குமார கோவில்)
திருவிலஞ்சி என்னும் இத்திருத்தலத்தில் சித்ரா நதி தீர்த்தத்தில் கபிலர், காசிபர், துருவாசர் ஆகிய மும்முனிவர்களின் ஐயப்பாட்டை நீக்கி அன்னார்கள் வேண்டிக்கொண்டதிற்கிணங்க இத்தலத்தில் ‘இலஞ்சி குமாரராக’ முருகப் பெருமான் வள்ளி,தேவசேனாசமேதராகஎழுந்தருளி காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
அத்துடன் பார்வதி – பரமேஸ்வரரின் திருமணத்திற்காக யாவரும் இமயம் சென்ற போது பாரப்பழுவினால் வடதிசை தாழ, தென்திசை உயர்ந்த பொழுது, இதனை சமப்படுத்த சிவபெருமானின் ஆணையை ஏற்று தென்பகுதி வந்த குறுமுனியாகிய அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ‘வெண்மணலாலான சிவலிங்கம்’ இத்திருக்கோயிலில் உள்ளது.
தென் திசை புறப்பட்ட அகத்தியர் பொதிகைமலையின் குற்றாலத்திற்கு வந்தார். அப்போது குற்றாலத்தில் சிவன் கோவில் அமைக்க எண்ணிய அகத்தியர்க்கு தடங்கல்கள் ஏற்பட
அவர் சித்ரா நதி தீர்த்தத்திற்கு வந்து வெண்மணலால் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார்.
தேவநாகரியில் வெண்மணல் ”இருவாலுகம்” என்று அழைக்கப்படுவதால் இத்தலத்துச் சிவனுக்கு இருவாலுக ஈசர் என்ற பெயர் ஏற்பட்டது. வந்த வேலை முடிய வேண்டுமே என எண்ணிய அகத்தியர் முருகப்பெருமானை வேண்டினார், முருகப்பெருமானும் அகத்தியர் முன்னே தோன்றி அவருக்கு அறிவுரை கூற அகத்தியரும் அவ்வாறே செய்து தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றினார்.
நீரும்,தாமரையும் நிறைந்த இடம் எனப் பொருள் கொண்ட இலஞ்சி என்னும் இத்தலத்தில் எழுந்தருளி அருள்புரியும் திரு இலஞ்சிகுமாரரை அருணகிரிநாதர் தம்முடைய திருப்புகழில் பாடிப்பணிந்து வணங்கியுள்ளார். இலஞ்சி என்ற சொல்லுக்கு மகிழம் என்ற பொருளும் உண்டு. இக்கோவிலின் தல விருட்சம் மகிழ மரம். கி.பி 14 ம் நூற்றாண்டில் மாறவர்மன் குலசேகரபாண்டியன் இக்கோவிலைப் புதுப்பித்துச் செப்பனிட்டுக் கட்டுவித்தார்.
இத்திருக்கோவிலின் சுற்று மதில் சுவரை 15ம் நூற்றாண்டில் சொக்கம்பட்டி ஜமீன்தாரான காளத்திய பாண்டியன் கட்டுவித்துச் சிறப்புச் செய்துள்ளார். இத்திருக்கோயில் இருவாலுக ஈசர் என்றும் இருவாலுக ஈசர்க்கினியாள் என்றும் சிவத்தலமாக இருந்த போதிலும் திரு இலஞ்சி குமாரர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அம்மை அப்பருடன் எழுந்தருளி உள்ளதால் இங்கு திருமணம் செய்வது விசேஷம். ஆகவே இங்கு அதிக அளவில் திருமணம் நடப்பது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும். மேலும், முருகப்பெருமான் ரிஷிகளின் வேண்டுகோளின் படி வரத்தை இன்றும் கொடுத்தருள்கிறார். எனவே இத்தலத்து திருவிலஞ்சிக்குமாரர் வரதராஜப் பெருமான் என்றும் அழைக்கப்படுகிறார்.
திருக்குற்றாலத்தின் ஈசான திசையில் அமைந்துள்ள இலஞ்சியில் குடிகொண்டுள்ள குமரனிடம் கபிலர்,துர்வாசர் காசிபர்,ஆகியோர் “உண்மையான பரம்பொருள் யார்?” என்று கேட்க “நானே பரம்பொருள்” என்று சொல்லித் தனக்குத் தானே வரதராஜப்பெருமான் எனும் தொல்பெயர் சூட்டிக் கொண்டார். வுரதன் என்றால் வரம் தரும் வள்ளல்.
வேண்டுவோர்க்கு வேண்டியது கொடுக்கும் வள்ளலாக இத்தலத்துக் குமரன் உள்ளார்.
முருகப்பெருமான் கருவில் உதித்த அவதாரம் கிடையாது. சிவனுடைய அங்க அவதாரம் என்பது குறிப்பிடத்தக்கது. அருணகிரிநாதரின் கந்தரனுபூதியில் வரும் ‘கருதாமறவா” எனத் தொடங்கும் பாடலின் கடைசி வரியில் ‘வரதா முருகா மயில் வாகனனே” என்று பாடுகிறார்.
ஆகையினால் முருகனுக்கும் வரதராஜப் பெருமான் என்னும் பெயர் பொருந்தும்.
இங்கு தினசரி ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.. சித்திரை பிரமோத்ஸவம்,
வைகாசி விசாகம், நவராத்திரி,கந்தசஷ்டி, தனுர் பூஜை, தைபூசம், மாசிமகம் ஆகிய விழாக்கள்
சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.