அஷ்ட நரசிம்மர் கோவில் – பகுதி 6
தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்னும் பக்தனின் வாய்மொழிக்கு ஏற்ப தூணில் இருந்து வந்த கடவுள் நரசிம்மர். கோபத்துடன் இரணியனை வதம் செய்த நரசிம்மருக்கு எட்டு கோவில்கள் புகழ் வாய்த்தவையாக உள்ளன. அவற்றில் இன்று ஆறாம் கோவிலைப் பற்றிப் பார்ப்போம்.
நாமக்கல்
திருமகள், தன் கணவரான மகாவிஷ்ணு எடுத்த நரசிம்மர் அவதாரத்தைக் காண வேண்டி, தவம் செய்து தரிசனம் பெற்ற தலம் இது. நரசிம்மரைக் காண வேண்டி இத்தலத்தில் திருமகள் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆஞ்சநேயர், கண்டகி நதியில் இருந்து சாளக்கிராம கல்லை (திருமாலின் அனுக்கிரகம் பெற்றது) எடுத்துக்கொண்டு வான்வழியே பறந்து சென்றார். இந்த தலத்தின் அருகே வந்தபோது, இங்குள்ள தீர்த்தத்தில் நீராட விரும்பினார் அனுமன்.
கையிலிருந்த சாளக்கிராமத்தைக் கீழே வைக்கமுடியாத நிலையில், என்ன செய்வதென யோசித்தவருக்குத் தீர்த்தக் கரையில் தவம் செய்த திருமகள் தெரிந்தார். மகிழ்ச்சியுடன் அவரிடம் அந்த சாளக்கிராமத்தைத் தந்து விட்டு நீராடச் சென்றார். அதைக் கையில் வாங்கிய திருமகள் குறித்த நேரத்திற்குள் வராவிட்டால் கீழே வைத்துவிடுவேன் என்று கூறினார்.
அதுபோலவே அனுமன் வராதிருக்கத் திருமகள் அக்கல்லைக் கீழே வைத்தார். அது பெரியதாக விசுவரூபம் பெற்று பெருமலையானது. அதிலிருந்து நரசிம்மர் தோன்றி திருமகளுக்கும் ஆஞ்சநேயருக்கும் காட்சியளித்தார். சாளக்கிராமத்தைக் கொண்டுவந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில், கையில் ஜபமாலை, இடுப்பில் கத்தியுடன் நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
நாமக்கல்லில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.